Published : 11 Apr 2022 10:18 AM
Last Updated : 11 Apr 2022 10:18 AM

ராம நவமி ஊர்வலத்தில் மோதல்: ம.பி.யில் 3 இடங்களில் ஊரடங்கு; குஜராத்தில் ஒருவர் பலி

மத்தியப் பிரதேசத்தில் நேற்று ராம நவமி ஊர்வலத்தில் நடந்த மோதலின் தொடர்ச்சியாக இன்று 3 இடங்களில் போலீஸார் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர்.

ம.பி. கார்கோன் பகுதியில் நேற்று ராம நவமியை ஒட்டி ஊர்வலம் நடந்தது. இதில் தலப் சவுக் பகுத்யில் தொடங்கிய ஊர்வலம் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதியின் வழியாக சென்றபோது அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சத்தமாக ஒலிப்பெருக்கிகளை இசைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் வெடித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து இருதரப்பினரும் மோதிக் கொள்ள போலீஸார் அங்கு விரைந்தனர். போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு, கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. ஊர்வலம் பாதியிலேயே தடைப்பட்டது. அப்பகுதியில் 4 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கோயில் ஒன்று சூறையாடப்பட்டது. இதனையடுத்து தலப் சவுக் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் குஜராத் மாநிலத்தில் ஆனந்த் மாவட்டத்தில் கம்பத், சபர்கந்த் மாவட்டங்களில் ராம நவமி ஊர்வலங்களில் மோதல் வெடித்தது. கல்வீச்சு சம்பவங்கள், தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. மோதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசிக் கலைத்தனர். இதில் கம்பத் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மீட்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் சிவ்பூர் பகுதியில் மோதல் ஏற்பட்டதால், போலீஸார் அங்குக் குவிக்கப்பட்டு பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா பகுதியில் ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். லோஹர்டக் பகுதி முழுமையும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ராமர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராம நவமி நாளில் 4 மாநிலங்களில் நடந்த மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ராமநவமியை முன்னிட்டு விடுதி உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்கிடையே நடந்த மோதலில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x