Published : 11 Apr 2022 07:22 AM
Last Updated : 11 Apr 2022 07:22 AM

உக்ரைன் போரால் ரஷ்யா 11.2%,  உக்ரைன் 45.1%  சரிவை சந்திக்கும் - உலக வங்கி எச்சரிக்கை 

வாஷிங்டன்: போர் காரணமாக உக்ரைனின் பொருளாதாரம் 45.1 சதவீதமும், ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.2 சதவீதமும் சரிவைச் சந்திக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போரினால் இரண்டு நாடுகள் மற்றும் அதன் அண்டை நாடுகளை பாதிக்கும் என்பதால் உலக வங்கி அறிக்கை ஒன்றை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில் உக்ரைனை கடுமையாக எச்சரித்துள்ள உலக வங்கி, தொடர்ந்து போர் நீடித்தால் அது பெரிய பொருளாதார பாதிப்புக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது. மொத்த பிராந்தியமும் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் 4.1 சதவீதமும், கிழக்கு ஐரோப்பாவில் மட்டும் 30.7 சதவீதமும் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. உக்ரைனின் பொருளாதாரம் இந்த ஆண்டில் 45.1 சதவீதத்தற்கு குறையும் என்றும், இது கடந்த மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் கணித்தை விட 10-35 சதவீதம் அதிகம் என்றும் தொரிவித்துள்ளது. ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.2 சதவீதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான உலக வங்கியின் துணைத் தலைவர் அன்னா பிஜெர்டே செய்தியாளர்களிடம் கூறும் போது, "எங்களின் முடிவுகள் அலட்சியப்படுத்த முடியாதவை. எங்களுடைய முன்கணிப்பு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பிராந்தியங்கள் பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நிலையை தலைகீழாய் மாற்றியுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் பிராந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் இரண்டாவது பெரிய அதிர்ச்சி இது. பெருந்தொற்றின் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து பல நாடுகள் மெல்ல மீண்டுவரும் நிலையில் இந்த ஆபத்து வந்துள்ளது" என்று தெரிவித்தார்.

வாஷிங்டனைத் தளமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனங்கள் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் இந்த ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் 4.1 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கின்றன. இது போருக்கு முன்னால் கணிக்கப்பட்ட மூன்று சதவீத வளர்ச்சியில் இருந்து தலைகீழான மாற்றும் மற்றும் 2020 ல் தொற்று நோயால் தூண்டப்பட்ட மந்தநிலையை விட இரண்டு மடங்கு மோசமானது.

மோசமான சூழல்: அரசாங்கத்தின் வருவாய் குறைந்து விட்டது, மூடப்பட்ட அல்லது ஒரளவுக்கே இயங்கும் வணிக நிறுவனங்கள், கடுமையாக சீர்குலைந்திருக்கும் பொருட்களின் வர்த்தகம் ஆகியவற்றால் உக்ரைனின் பொருளாதாரம் கடுமையான அழுத்தத்தின் கீழ் உள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பில் பெரும் சேதம் அடைந்திருப்பதால் நாட்டின் பெரிய பகுதிகளிலும் தானிய ஏற்றுமதி பிற பொருளாதார நடவடிக்கைகள் சாத்தியமில்லாதவை ஆகிவிட்டன. பிராந்தியத்தின் பொருளாதாரம் சுமார் 9 சதவீதம் குறையும். இது 2008ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை விட மோசமானது. இதனால் ரஷ்யாவிற்கு 20 சதவீதமும், உக்ரைனுக்கு 75 சதவீதமும் சரிவு ஏற்படும்.

இணை சேதம்: கிழக்கு ஐரோப்பாவின் உள்நாட்டு உற்பத்தி மட்டும் 30.7 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. போருக்கு முன்பு இது 1.4 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்த போரில் ரஷ்யாவின் கூட்டாளியான பெலாரஸ் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளாலும் இப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. போர் பிராந்தியத்திற்கு அருகில் இருக்கும் நாடு என்பதைத் தவிர்த்து உக்ரைன் மற்றும் ரஷ்யாவைச் சார்ந்திருக்கும் சிறிய பொருளாதார வசதியுள்ள நாடு என்பதால், மால்டோவா இந்த போரினால் மிகவும் பாதிக்கப்படும் ஒரு நாடாக இருக்கப்போகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x