Published : 26 Mar 2022 08:52 AM
Last Updated : 26 Mar 2022 08:52 AM
சென்னை: தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் 491 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தியாகராயர் நகரில்மாநில அளவிலான உணவுபாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கான பயிலரங்கை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தேசிய மற்றும் மாநில அளவில் செவிலியராகப் பயின்று பட்டம் பெற்று,செவிலியர் கலந்தாய்வில் பதிவுசெய்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முதல் திருநங்கை தமிழ்ச்செல்விக்கு, தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் திட்ட உதவியாளருக்கான பணிஆணையை அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு அலுவலர் செந்தில்குமார், பொதுசுகாதாரம் மற்றும்நோய்த்தடுப்பு மருந்து துறைஇயக்குநர் செல்வவிநாயகம், உணவு பாதுகாப்பு துறை இயக்குநர் மற்றும் கூடுதல் ஆணையர் சேரன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம்-2006, நாடு முழுவதும் 2011 ஆகஸ்ட் 5-ம் தேதிஅமல்படுத்தப்பட்டது. மாநில அளவில் உணவு பாதுகாப்புத்துறை இந்த சட்டத்தை அமல்படுத்துகிறது. மாநில அளவில் ஆணையர், உணவு பாதுகாப்புத்துறை தலைவர் ஆவார். மாநில அளவில் கூடுதல் இயக்குநர் மற்றும் கூடுதல் ஆணையர், துணை இயக்குநர் மற்றும் சுகாதார அலுவலர், அரசு உதவி வழக்கறிஞர் (நிலை-1), அரசு உதவி வழக்கறிஞர் (நிலை-2) மற்றும் மாவட்ட அளவில் 32 நியமன அலுவலர்களும், 394 உணவு பாதுகாப்பு அலுவலர்களும் உள்ளனர். சென்னை, தஞ்சாவூர், மதுரை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலுள்ள 6 உணவு ஆய்வகங்களில் உணவு மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான பயிலரங்கம் இன்று (நேற்று) தொடங்கப்பட்டு 32 மாவட்ட நியமன அலுவலர்கள், 64 உணவு பாதுகாப்பு அலுவலர்கள், 3 உணவு பகுப்பாய்வாளர்கள் ஆகியோருக்கு வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்துறையில் உரிமம் மற்றும் பதிவுச்சான்று மூலமாக பெறப்பட்ட வருவாய் ரூ.38.2 கோடி ஆகும். கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிக அளவு வருவாய் பெற உழைத்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுத்தமான பிரசாதம் வழங்கும் கோயில்களுக்கு போக் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் தமிழகத்தில் 379 கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலந்த உணவுப்பொருட்களை தடை செய்வதை முக்கிய பணியாக கருதுகிறது.
மே 2021 முதல் பிப்ரவரி 2022 வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 91 டன் உணவுபாதுகாப்பு அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று காவல்துறையினரால் 400 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தயாரித்த, விற்பனை செய்த தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு பிப்ரவரி-2022 வரை 9 அவசர தடையாணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT