Published : 25 Mar 2022 06:29 AM
Last Updated : 25 Mar 2022 06:29 AM

தனியார் நிறுவனங்களில் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது: முத்தரசன்

தருமபுரி: பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட் களின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தருமபுரியில் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட நிர்வாகக் குழு மற்றும் மாவட்டக் குழு கூட்டம் தருமபுரியில் நடந்தது. இதில் பங்கேற்க, கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தருமபுரி வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் முடிந்த உடன் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்தி உள்ளது. விலையேற்றத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி விரைவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டும் நடவடிக்கை இருமாநில நல்லுறவை சீர்குலைக்கும்.

ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை ஆண்டுதோறும் மத்திய அரசு படிப்படியாக குறைத்து வருகிறது. நிதி குறைப்பை கைவிடுவதுடன், 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாகவும், இந்த பணிக்கான ஊதியத்தை நாளொன்றுக்கு ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.

தமிழக நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் கேட்கும் அரசு ஊழியர்களுக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை. தேர்தல் அறிக்கையில் கூறிய மகளிர் உரிமைத் தொகை மாதம்தோறும் ரூ.1,000 தர விரைவான நடவடிக்கை தேவை. ஒகேனக்கல் உபரி நீரை தருமபுரி மாவட்ட நீர்நிலைகளில் நிறைக்கும் திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்ந்து தனியார் மயமாக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. நடைமுறையில் இருந்த 44 தொழிலாளர் சட்டங்களில் 19 சட்டங்களை நீக்கியதுடன், எஞ்சியுள்ள 25 சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கியுள்ளனர். இதைக் கண்டித்து, வரும் 28, 29-ம் தேதிகளில் அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது, கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, நஞ்சப்பன், மாவட்டச் செயலாளர் தேவராசன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x