Published : 24 Mar 2022 07:17 AM
Last Updated : 24 Mar 2022 07:17 AM
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாஜக எம்எல்ஏ வானதிசீனிவாசன் பேசியதாவது:
இந்தியாவிலே அதிகம் முன்னேறிய, கல்வியறிவு, தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு வழங்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதை நினைத்து எல்லோரும் பெருமைப்பட வேண்டும். நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, இந்த மாநிலத்துக்கு கிடைத்த மகத்தான தலைவர்களால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: தமிழக வளர்ச்சிக்கு 1921-ல் நீதிக்கட்சி ஆட்சியிலேயே அடித்தளம் அமைக்கப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை, ஆண்கள், பெண்களுக்கு கட்டாயக் கல்வி, இடஒதுக்கீட்டுக்கான வகுப்புவாரி அரசாணை ஆகியவை அப்போதே வந்துவிட்டது.
வானதி சீனிவாசன்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூகநிதியை எடுத்துக் கூறியவர் ராமானுஜர். சுயமரியாதைக்கு உதாரணமாக இருந்தவர் கம்பர்.தொழில் நிறுவனத்தை நடத்துவதற்கு அனைவருக்கும் பயிற்சி தேவை. எனவே, இத்திட்டத்தின் கீழ் அனைத்து பயிற்சிகளையும் அளிக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.27 கோடியில் சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த மையத்தை சமூக பாலின விழிப்புணர்வை ஏற்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும்.
இந்தப் பயிற்சி துறை அலுவலர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அவசியம். பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் மையம் தொடங்கப்பட்டு அனைத்து நிலைகளில் இருப்பவர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன்: பாஜக உறுப்பினர் புதிய வரலாறு கற்றுக் கொண்டிருக்கிறார் என்று கருதுகிறேன். பெண்கள் இப்போது கேட்பது சமவாய்ப்பு, சமத்துவம்தான். எங்கிருந்தாலும் பணி செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, சொத்தில் பங்கு என எல்லாவற்றையும் பெண்களுக்கு வழங்கியுள்ளது தமிழகம்.
வானதி சீனிவாசன்: கோவை யில் தண்ணீர்ப் பிரச்சினை, மின் தட்டுப்பாடு நிலவுகிறது. குளங்களில் ஆகாயத் தாமரை மண்டிக் கிடக்கிறது. ஐந்து நாட் களுக்கு ஒருமுறைதான் குப்பை அகற்றுகிறார்கள். சாலைகள் மோசமாக உள்ளன. சிறுவாணி அணையை தூர்வாராததால் கோவையில் குடிநீர்த் தட்டுப் பாடு ஏற்படுகிறது. இந்தப் பிரச் சினைகள் தொடர்பான மனுவை சம்பந்தப்பட்ட அமைச்சர் அலுவல கத்தில் 2 மாதங்களுக்கு முன்பே கொடுத்துள்ளோம்.
அமைச்சர் கே.என்.நேரு: சிறுவாணியிலிருந்து கோவைக்கு தர வேண்டிய தண்ணீரின் அளவை கேரள அரசு குறைத்துள்ளதால் கோவையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, கேரள அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். கோவையில் முக்கியமான சாலைகள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. மற்ற சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி: கோவை மாநகராட்சி சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கி, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தெருவிளக்குகள் அமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை சாலை சீரமைப்புக்காக ரூ.143 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்க உள்ளன.
கடந்த 10 மாதங்களில் பழுதடைந்த சாலைகளைக் கணக்கெடுத்து, ஒரே தவணையில் ரூ.200 கோடி வழங்கி, சீரமைப்புப் பணிகளை தொடங்கியுள்ளோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT