Published : 18 Apr 2016 07:34 AM
Last Updated : 18 Apr 2016 07:34 AM

100 நடன கலைஞர்கள் பங்கேற்பு: எலியட்ஸ் கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு நடனம் - தேர்தல் நடத்தும் அலுவலரும் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100 நடன கலைஞர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பாடலுக்கு நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

‘தி இந்து’ மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் ‘கார்கள் இல்லாத ஞாயிறு’ விழா காலை 6 முதல் 9 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வின்போது கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் மோட்டார் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த சாலைகளில் பொதுமக்கள், அவர்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடி மகிழ்வது வழக்கம்.

இந்த கார்கள் இல்லாத ஞாயிறு விழாவில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பகுதி வேளச்சேரி தொகுதியில் வருவதால், அத்தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களின் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும் வாக்காளர் விழிப்புணர்வு வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் பரிசுகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, திரைப்பட நடிகை ரேவதி சங்கரன் இயற்றி, இசையமைத்து பாடிய “போடுவோம் ஓட்டு, வாங்கமாட்டோம் நோட்டு” என்ற பாடலுக்கு பல்வேறு இசைப் பள்ளிகளைச் சேர்ந்த 100 கலைஞர்கள் நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சி அளித்த தியாகராயநகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கவிதா ராமுவும், நடனமாடி பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நடன கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தது குறித்து கவிதா ராமுவிடம் கேட்டபோது, “கடந்த வாரம்தான் பயிற்சி வீடியோ ஒன்றை நடன கலைஞர்களுக்கு வாட்ஸ்-ஆப் மூலமாக அனுப்பி வைத்தேன். அதன் மூலமே அவர்கள் பயிற்சி பெற்றனர். அனைவரையும் ஓரிடத்தில் கூட்டி பயிற்சி அளிக்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு, வடபழனியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் நேரடியாக அவர்கள் சிறப்பாக நடமாடினர். தற்போது எலியட்ஸ் கடற்கரையிலும் நடனமாடினர்” என்றார்.

அக்குழுவில் இடம்பெற்ற மாணவி சாய் சஞ்சனாவிடம் கேட்டபோது, “நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.ஆசியா மரியம், தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x