Published : 04 Mar 2022 07:26 AM
Last Updated : 04 Mar 2022 07:26 AM

தேர்தலில் வென்ற ஒரு அதிமுக கவுன்சிலரும் திமுகவில் இணைந்ததால் எதிர்க்கட்சிக் கவுன்சிலர்கள் இல்லாத நாமக்கல் நகராட்சி

நாமக்கல்: நாமக்கல் நகராட்சியில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற ஒரே ஒரு பெண் கவுன்சிலரும் திமுகவில் இணைந்தார். இதையடுத்து, எதிர்கட்சிக் கவுன்சிலர்கள் இல்லாத நகராட்சியாக நாமக்கல் மாறியது.

நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 22 மற்றும் 25-வது வார்டுகளில் திமுக ஆதரவு பெற்ற சுயேச்சைகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால், 37 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 36 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. மேலும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இரு கவுன்சிலர்களுடன் திமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கை 38 ஆக இருந்தது.

கொசவம்பட்டி 29-வது வார்டில் மட்டும் அதிமுக-வைச் சேர்ந்த ரோஜாரமணி வெற்றி பெற்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் நாமக்கல் நகராட்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாக்கு முன்னர் நாமக்கல் அண்ணா சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் ரோஜாரமணி, அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்பி, எம்எல்ஏ பெ. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து, நாமக்கல் நகராட்சியில் திமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்ததோடு, எதிர்க்கட்சிக் கவுன்சிலர்களே இல்லாத நகராட்சியானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x