Published : 01 Feb 2022 12:04 PM
Last Updated : 01 Feb 2022 12:04 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த மேக்களூர் கிராமத்தில் உள்ள நவநீத கோபால கிருஷ்ணசாமி கோயிலில் யானையின் நினைவாக வைக்கப்பட்ட சிற்பம் மற்றும் கல்வெட்டு, கீக்களூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் நிலம் தானம் வழங்கியதாக கூறப்படும் சம்புவராயர் கால கல்வெட்டு உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேக்களூர் கோயிலில் உள்ள யானையின் சிற்பம், 4 அடி உயரம் மற்றும் 2 அடி அகலம் கொண்டது. சிற்பத்தின் மேல் பகுதியில் உள்ள வட்டத்தில் இலட்சனையை போன்று தும்பிக்கையை மடக்கிய நிலையில் யானையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
சிற்பத்தின் கீழ் பகுதியில் உள்ள கல்வெட்டில், பட்டத்து யானையின் பெயரை நீலகண்டரையன் என புத்தன் புவந திவாகரன் என்பவர் சூட்டி தானமாக கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கி.பி.10 மற்றும் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.
கீக்களூர் சிவன் கோயில் கருவறையின் புன்புறம் உள்ள சுவரில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜநாராயண சம்புவராயர், 2 நிலம் தானமாக கொடுக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. இவ்வூரை பாக்கப்பற்றில் உள்ளது எனவும், கோயிலில் உள்ள இறைவனின் பெயரை விக்கிரம சோளிஸ்வரமுடைய நாயனார் என கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பாக்கப்பற்று நாட்டைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு நிலம் மற்றும் கோயில் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கூறும் தகவல்கள் உள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT