Published : 29 Jan 2022 12:05 PM
Last Updated : 29 Jan 2022 12:05 PM

ஊழல் வழக்கில் முதல்வர் குற்றம்சாட்டிய நிறுவனத்துடன் காவல்துறை ஒப்பந்தமா? - அன்புமணி கேள்வி

சென்னை: "முதல்வரால் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட நிறுவனத்துடன் காவல்துறை ஒப்பந்தமா?" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காவல்துறையினரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துடன் காவல்துறை தலைமை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. காவல்துறையின் நோக்கம் சரியானது; பயிற்சி நிறுவனத் தேர்வு மிகவும் தவறானது. 2016-ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு மோசடியில் அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துக்கு தொடர்பு உள்ளது.

28.06.2017, 01.07.2017 ஆகிய தேதிகளில் இதை பா.ம.க. ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. ஊழல் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி 01.07.2017 பா.ம.க. போராட்டம் நடத்தியது. டி.என்.பி.எஸ்.சி ஊழல் குறித்து பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் அப்பல்லோ பயிற்சி நிறுவனத்தில் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை 18.01.2018-இல் சோதனை நடத்தியது. அப்பல்லோ நிறுவனம் மீது நடவடிக்கை கோரி 07.02.2020-இல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

மு.க.ஸ்டாலினால் ஊழல், மோசடி நிறுவனம் என்று குற்றஞ்சாட்டப்பட்ட அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துடன், அவரது ஆட்சியிலேயே, அந்த நிறுவனத்தில் சோதனை நடத்திய காவல்துறையே ஒப்பந்தம் செய்வது ஊழலுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமாக அமைந்துவிடாதா?

தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் அப்பல்லோ நிறுவனத்தின் மீதான வழக்கு விசாரணைகள் நீர்த்துப் போகக்கூடும். அதற்கு இடம் தராத வகையில், அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துடன் காவல்துறை செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x