Published : 21 Feb 2016 09:26 AM
Last Updated : 21 Feb 2016 09:26 AM

கருத்து சுதந்திரத்துக்கு எதிரான போக்கை பிரதமர் கண்டுகொள்ளாதது கண்டிக்கதக்கது: கோபாலகிருஷ்ணகாந்தி கருத்து

கருத்து சுதந்திரத்துக்கு எதிரான போக்கைக் கண்டு பிரதமர் நரேந்திரமோடி அமைதியாக இருப் பதைக் கண்டிக்கிறேன் என்று மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணகாந்தி பேசினார்.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சார்பில் சென்னையில் நேற்று ‘டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தைக் காப்போம்' என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஜவஹர்லால் நேரு மாணவர்கள் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கன்னியப்பன் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ணகாந்தி பேசியதாவது:-

கருத்து சுதந்திரத்தை தேச துரோகம் என்று சொல்லக்கூடாது. கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும். கருத்து தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை உள் ளது. அவ்வாறு கருத்து தெரிவிப் போர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடக்கூடாது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை பிரிவினைவாதிகளின் இருப்பிடம் என்று கூறுகிறார்கள். இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத் தலாக இதைப் பார்க்க வேண்டும். ஒருவரின் தேசப் பற்று பற்றி கேள்வி கேட்கிறார்கள். அப்படி யானால் தேசப்பற்று என்னவென்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும். கருத்து சுதந்திரம், அதிருப்தி தெரிவித்தல் போன்ற வற்றை தேசத்துக்கு எதிரான செயல் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது.

காந்தி, பகத்சிங் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124ஏ-யை பயன்படுத்தி தேச துரோக குற்றச்சாட்டு கூறியது ஆங்கில அரசாங்கம். இச்சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு கூறினார். ஆனால் இப்போதும் அந்த சட்டப்பிரிவு இருக்கிறது. அதனைப் பயன்படுத்தி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தேச துரோக குற்றச்சாட்டு கூறுவதை அப் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். அவர்களை வணங்குகிறேன்.

இவ்வாறு கோபாலகிருஷ்ண காந்தி பேசினார்.

‘தி இந்து' முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி பேசிய தாவது:-

2012 தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் தர வரிசைப்படி 4-க்கு 3.9 என்ற உயர்ந்த இடத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் 2-வது இடத்தில் இப் பல்கலைக்கழகம் உள்ளது. உலகளவில் சமூக அறிவியல் மற்றும் அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் சர்வதேச தொடர்புகள் சார்ந்த 100 தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இப் பல் கலைக் கழகமும் ஒன்றாகத் திகழ்கிறது.

1970-ல் தேசிய ஒருமைப்பாடு, சமூக நீதி, மதச்சார்பின்மை. ஜன நாயக ரீதியிலான வாழ்க்கை, சமூகப் பிரச்சினைக்கு அறிவியல் பூர்வமாக தீர்வு காணுதல் போன்ற ஜவஹர்லால் நேருவின் கொள்கைகளை நோக்கமாகக் கொண்டு இப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மீதான தாக்குதல் இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தில் இந்தியா பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து மீது தாக்குதல் நடத்துவது போலாகும். தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் திகழும் இப்பல்கலைக் கழகத்தை மூடக்கூடாது.

பேச்சுரிமை மற்றும் எதையும் விவாதத்துக்கு உட்படுத்தும் தன்மையும் முக்கியமானது. தேசிய உணர்வு என்பது ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் இருந்து உருவாவது ஆகும். இதைத் திணிக்க முடியாது. ஜனநாயக அமைப்பில் மக்கள் குரலுக்கும், மாற்றுக் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு மாலினி பார்த்தசாரதி பேசினார்.

புத்தகம் வெளியீடு

அதைத்தொடர்ந்து, ‘எது தேசம்? எது துரோகம்? ' என்ற தலைப்பிட்ட புத்தகத்தை மாலினி பார்த்தசாரதி வெளியிட முதல்பிரதியை அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர் பெற்றுக் கொண்டார்.

இக்கூட்டத்தில், மனோன் மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, துப்புரவு தொழிலாளர் இயக்க தேசிய செயலாளர் தீப்தி சுகுமார் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x