Last Updated : 06 Dec, 2020 06:25 PM

 

Published : 06 Dec 2020 06:25 PM
Last Updated : 06 Dec 2020 06:25 PM

புதுச்சேரியில் வாய்கால் தூர்வாராததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்; மழையால் காய்கறி பயிர்களும் அழுகின: விவசாயத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் தவிப்பு

புதுச்சேரி அருகே வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் அறுவடைக்குத் தயாராக இருந்த 150 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. அதேபோல், 50 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த காய்கறிகளும் தொடர் மழையால் அழுகின. இதனால், இவ்விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பட்டதாரி இளைஞர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

புதுச்சேரியை அடுத்த சோரப்பட்டு, வம்பு பட்டு, விநாயகம் பட்டு, செல்லிப்பட்டு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளைப்பொன்னி உட்பட பல்வேறு நெல் ரகங்களை பயிரிட்டுள்ளனர். தற்போது, நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடைக்குத் தயாராக இருந்தது. இந்நிலையில், அடுத்தடுத்து நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக பொழிந்த கனமழையால் அனைத்து விளைநிலங்களிலும் மழை நீர் தேங்கியது.

தேங்கிய மழை நீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவித்தனர். வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படாததுதான் காரணம் எனக் கூறும் விவசாயிகள் அரசு முறையாக வாய்க்கால்களை தூர்வாரி பராமரித்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்தனர்.

சோரப்பட்டில் தனது தந்தையுடன் விவசாயத்தில் ஈடுபட்ட மென்பொருள் பொறியாளர் சங்கரதாஸ் கூறுகையில், "நான் எனது தந்தையோடு இணைந்து இம்முறை விவசாயத்தில் ஈடுபட்டேன். முக்கியமாக விவசாயத்தைக் கற்றுக் கொண்டிருந்தேன். இந்நிலையில், அறுவடைக்கு நெற்பயிர் தயாராக இருந்தது. திடீர் புயல்களால் பொழிந்த மழையால், நீரில் மூழ்கி போனது. தற்போது அத்தனையும் சேதமாகிவிட்டது. விவசாயம் எவ்வளவு கடினமானது என்பது இப்போது நன்றாக புரிகிறது. ஏக்கருக்கு ரூபாய் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததே முக்கியக்காரணம். அரசு உடனடியாக இந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும். நஷ்டமடைந்த என்னை போன்ற விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

சோரப்பட்டு விவசாயி கஜேந்திரன் கூறுகையில், "அரசு முறையாக வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி பராமரித்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அரசு விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

காய்கறிகளும் சேதம்

புதுச்சேரியில் பெய்த கனமழையால் 50 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த கத்தரி உள்ளிட்ட காய்கறிப் பயிர்கள் அழுகி சேதம் அடைந்துள்ளது. மாற்றுப் பயிர் செய்ய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என காய்கறி விவசாயிகள் கோரியுள்ளனர்.

புதுச்சேரியில் சோம்பட்டு, திருக்கனூர், செல்லிப்பட்டு, விநாயகம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கத்தரி, வெண்டை, உள்ளிட்ட காய்கறிகள் பயிர் செய்யப்பட்டுள்ளன. கனமழையால் காய்கறி பயிரிடப்பட்டிருந்த விளைநிலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் அழுகி, அதிலிருந்த காய்கறிகளும் அழுகிவிட்டன.

செல்லிப்பட்டில் கனமழையால் வீணாகி போன கத்தரி செடிகள்.

செல்லிப்பட்டு கிராமத்தில் பொறியியல் படித்த இளைஞர்கள் ஒன்றிணைந்து கத்தரி விவசாயம் செய்திருந்தனர். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 10 மூட்டை கத்தரிக்காய் அறுவடை செய்து சந்தைக்கு அனுப்பி நல்ல லாபம் ஈட்டி வந்தனர். இந்நிலையில், தொடர் மழை காரணமாக கத்தரி பயிரிடப்பட்டிருந்த விளை நிலத்தில் மழைநீர் தேங்கியது. இதன்காரணமாக, கத்தரி செடியில் இருந்த கத்தரிக்காய்கள் அனைத்தும் அழுகி விழுந்துவிட்டன. மேலும், கத்தரிச் செடியும் அழுகி காய்ந்து வருகிறது.

இது பற்றி, பொறியியல் பட்டதாரியான விவசாயி பிரசாந்த் கூறுகையில், "இளைஞர்களாகிய நாங்கள் விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு கத்தரி விவசாயம் செய்து இருந்தோம். கத்திரி அறுவடையில் நல்ல லாபம் கிடைத்தது. தொடர் மழையின் காரணமாக முற்றிலும் கத்தரி நாசமாகி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. அரசு விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இதற்கான உரிய நிவாரணத்தை வழங்கி தொடர்ந்து பயிர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x