Last Updated : 06 Dec, 2020 06:00 PM

 

Published : 06 Dec 2020 06:00 PM
Last Updated : 06 Dec 2020 06:00 PM

அருவாமூக்கு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: தொழில்துறை அமைச்சர் சம்பத் தகவல்

கடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மழை, வெள்ள சேதங்களை பார்வையிட்ட தொழில்துறை அமைச்சர் சம்பத் அருவாமூக்கு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

கனமழை காரணமாக, கடலூர் அருகே கீழ்பூவாணிக்குப்பம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங்பேடி ஆகியோர் பார்வையிட்டு தங்கியுள்ளவர்களிடம் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக கிடைக்கிறதா என கேட்டறிந்தனர். இதனைத்தொடந்து, பெருமாள் ஏரி, குண்டியமல்லூர் பகுதியில் நீரில் மூழ்கியுள்ள நெல்பயிர்களையும் பார்வையிட்டார்.

பின்னர் தொழில்துறை அமைச்சர் சம்பத் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தில் புரெவி புயலின் காரணமாக தொடர்ந்து பலத்த கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்ற நிலையில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. தண்ணீரை வடியவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெருமாள் ஏரியிலிருந்து விநாடிக்கு 6,257 கன அடி தண்ணீர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகிறது. மழையளவை பொறுத்து படிப்படியாக வெளியேற்றும் தண்ணீரின் அளவு குறைக்கப்படும். பரவனாற்றில் வரும் தண்ணீர், கடல் உள்வாங்காததால் நிலப்பகுதியில் அதிகமாக தேங்கி பாதிப்புகள் ஏற்படுகின்றன. அருவாமூக்கு திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது இப்பாதிப்புகள் தவிர்க்கப்படும். அருவாமூக்கு திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.54.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.60 கோடி நிதி தேவைப்படும் என அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அருவாமூக்கு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்" என்றார்.

கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x