Published : 05 Aug 2015 06:07 PM
Last Updated : 05 Aug 2015 06:07 PM

மதுபான ஆலை எதிலுமே நான் பங்குதாரர் இல்லை: டி.ஆர்.பாலு

மதுபான ஆலை எதிலும் நானோ, எனது குடும்பத்தினரோ பங்குதாரராக இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மதுவிலக்கை வலியுறுத்தி திமுக சார்பில் வரும் 10-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோர் மதுபான ஆலைகளை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மது உற்பத்தி ஆலைகளை நடத்துவதாக என்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக கருணாநிதியை சந்தித்தேன். உண்மை நிலவரத்தை அவரிடம் எடுத்துக் கூறினேன்.

எனது பெயரிலோ, எனது குடும்பத்தினர் பெயரிலோ மது உற்பத்தி ஆலைகள் எதுவும் இல்லை. எந்த மதுபான ஆலையிலும் நான் பங்குதாரராக இல்லை. ஆதாரமற்ற செய்திகளை சிலர் வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர். அவதூறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம்.

தமிழக அரசு மதுவிலக்கை அமல்படுத்தினால் எனது உறவினர்கள் சிலர் நடத்தும் மதுபான ஆலையின் உரிமத்தை திரும்ப ஒப்படைக்குமாறு அவர்களிடம் வலியுறுத்துவேன்'' என்று டி.ஆர்.பாலு கூறினார்.

கோல்டன் வாட்ஸ் பிரைவேட் லிமிடெட் மதுபான தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் குமரவேல் எழுதிய கடிதத்தை காட்டி, ‘தனக்கு அந்த ஆலையில் எந்தத் தொடர்பும் இல்லை’ என்றார் டி.ஆர்.பாலு.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x