Last Updated : 27 May, 2019 03:17 PM

 

Published : 27 May 2019 03:17 PM
Last Updated : 27 May 2019 03:17 PM

புதுவையில் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம்; விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் மின்துறை தலைமை அலுவலக நுழைவாயிலைப் பூட்டி மிக்சி, கிரைண்டரை உடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு வரும் ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும் உயர்த்தி அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி இன்று (திங்கள்கிழமை) பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சோனாம்பாளையம் பகுதியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தைப் பூட்டி, நுழைவுவாயிலில் அமர்ந்து தீப்பந்தம், ராந்தல் விளக்கை ஏந்தியும், அம்மிக் கல்லில் சட்னி அரைத்தும் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும்  மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், ப்ரிட்ஜை உடைத்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

புதுச்சேரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மக்களுக்குப் பரிசாக மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது என குற்றம் சாட்டிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சாமிநாதன் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெறும் வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதுச்சேரியில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதன்படி மின்கட்டணம்  4.59 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று தற்காலிகமான துணை மொத்த கட்டணம் 4 சதவீதம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.100 மின் கட்டணமென்றால் ரூ.4.59 உயர்த்தப்படும், அதேபோல் துணை கட்டணம் குறைக்கப்படாததால் ரூ.4 என சேர்த்து ரூ. 8.59 மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது.  இந்த மின் கட்டண உயர்வு ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் மின் கட்டணம் உயர்வு தொடர்பான கோப்பு எனக்கு வரவில்லை. அதிகாரிகளை அழைத்துள்ளேன். இதுகுறித்து விரைவில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x