Published : 31 May 2018 03:49 PM
Last Updated : 31 May 2018 03:49 PM

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களின் நியாயம் குறித்து ரஜினி சிந்தித்தது உண்டா? - முத்தரசன் கேள்வி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களின் கோரிக்கையின் நியாயம் குறித்து ரஜினிகாந்த் என்றைக்காவது சிந்தித்தது உண்டா என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ரா.முத்தரசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று, கடந்த 22 ஆம் தேதி காவல்துறையின் துப்பாக்கச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை 30 ஆம் தேதி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். ஆனால், இந்த நலம் விசாரிப்புப் பயணம் அரசியல் சதிதிட்டத்தின் செயல்பகுதியாக அமைந்திக்கிறது என்பதை செய்தியாளர்களிடம் அவர் கூறிய விஷத்தனமான கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன.

கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் மக்களின் கோரிக்கையின் நியாயம் குறித்து ரஜினிகாந்த் ஒரு நாளாவது சிந்தித்தது உண்டா? கடந்த 2013 ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலை கக்கிய நச்சுப்புகையால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, பலவகையான நோய்களால் தாக்கப்பட்னர். அப்போது அதுகுறித்து ரஜினிகாந்த் கவலைப்பட்டாரா?

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் ஆய்வு அறிக்கை ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் நல்வாழ்வு என்னென்ன வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை பட்டியல் போட்டு அறிக்கை வெளியிட்டது. அதாவது ரஜினிகாந்த் கவனத்தை ஈர்த்ததா?

ஸ்டெர்லைட் ஆலையின் விஷக்கழிவுகளால் தொடர்ந்து பாதிக்கபட்ட பொதுமக்கள், ஆலை விரிவாக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளை, பாதிப்புகளை உணர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தியது தவறா?

ஆயுதங்கள் ஏதுமின்றி, நிராயுதபாணிகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற பொதுமக்களை, சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் வழிமறித்து, தாக்குதல் நடத்தி ஆத்திரமூட்டியதை ரஜினிகாந்த் நியாயப் படுத்துகிறாரா?

போராட்ட வரலாற்றில் இதுவரை கேட்டிராத ஸ்னைபர் படைகொண்டு போராளிகளை குறிபார்த்து சுட்டு 13 பேர் படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தி வேதாந்தா நிறுவனம் எழுதிக் கொடுத்த வசனத்திற்கு அரிதாரம் இல்லாமல் ரஜினிகாந்த் குரல் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் அவர் நிதி மூலதன சக்திகளின் முகவர் ஆகியுள்ளார் என்பதை ஜனநாயக சக்திகள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

ரஜினிகாந்தின் வரம்பு மீறிய கருத்துகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டிக்கிறது. ரஜினிகாந்த் பொதுவெளியில் அடக்கமாக பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்” என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x