Published : 24 Apr 2024 04:02 AM
Last Updated : 24 Apr 2024 04:02 AM
கடலூர்: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பார்வதிபுரம் கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் வடலூரில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. கடலூர் கோட்டாட்சியர் அபிநயா தலைமை தாங்கினார்.
கடலூர் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வள்ளலார் சர்வதேச மையம் எப்படி அமைக்கப்பட உள்ளது? அதில் எந்த மாதிரியான கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள் ளது? என்பது குறித்து டிஜிட்டல் விளக்கப் படம் காண்பிக்கப்பட்டு அதனை வள்ளலார் தெய்வ நிலையை செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் விளக்கம் அளித்தார். பின்னர் பார்வதிபுரம் கிராம மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது அவர்கள் வள்ளலார் சர்வதேச மையம் அமைவதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதனை பெரு வெளியில் அமைக்கக் கூடாது. வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எங்கள் மூதாதையர்கள் 106 ஏக்கர் நிலம் கொடுத்தனர். அதில் தற்போது 60 ஏக்கர் தான் உள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ள 46 ஏக்கரை மீட்டு அதில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும் என ஒட்டு மொத்தமாக தங்கள் கருத்தை பதிவு செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகள் குறித்து அரசிடம் தெரிவிக்கிறோம் என்றனர்.
கடலூர் இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் சந்திரன், வடலூர் நகராட்சி தலைவர் சிவகுமார், திமுக நகர செயலாளர் தமிழ்ச் செல்வன், அதிமுக நகர செயலாளர் பாபு, பாமக மாவட்ட செயலாளர் சண்முத்து கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர அமைப்பாளர் இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஜோதிமணி, பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், ஆசிரியர் சிவக் குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT