Published : 20 Apr 2024 08:15 AM
Last Updated : 20 Apr 2024 08:15 AM
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாக்குகளைப் பதிவுசெய்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல்கட்சிகளின் தலைவர்கள் பலரும்காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
ஆளுநர் - முதல்வர்: ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரதுமனைவி லட்சுமி ரவி ஆகியோர் வேளச்சேரி அட்வென்ட் கிறிஸ்டியன் நடுநிலைப்பள்ளியில் காலை 11 மணிக்கு தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்தனர். வழக்கமாக, இதற்கு முன்பிருந்த ஆளுநர்கள் அனைவரும் தேர்தலின்போது தங்கள் சொந்த மாநிலத்துக்குச் சென்று வாக்களித்து வந்தனர்.
ஆனால், தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் வாக்களிக்க வசதியாக தனது வாக்கையும், மனைவி லட்சுமியின் வாக்கையும் சொந்த மாநிலமான பிஹாரிலிருந்து தென்சென்னை தொகுதிக்கு முன்பே மாற்றிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘தேர்தல்என்பது நம்நாட்டு ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாகும். இதில் பங்கேற்பதில்நான் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். இந்த நாட்டின்குடிமக்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்க வேண்டும்’’ என்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர், தேனாம்பேட்டை எஸ்ஐஇடி மகளிர் கல்லூரியில் காலை 8 மணியளவில் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். இதே வாக்குச்சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனைவி கிருத்திகாவுடன் சென்று வாக்களித்தார். மத்திய இணையமைச்சரும், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் - கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கூட்டமைப்பு வளாகத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
கட்சித் தலைவர்கள்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை - ஸ்ரீபெரும்புதூர் மணிமங்கலம் அரசு இ-சேவை மையத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் - ஆதம்பாக்கம் புனித மார்க்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும், அக்கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் - தி.நகர் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி - நீலாங்கரை சன்பீம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா - தி.நகர் தக்கர்பாபா வித்யாலயாவிலும், அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு - நந்தனம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், அமமுக பொதுச்செயலாளரும், அக்கட்சியின் தேனி தொகுதி வேட்பாளருமான டிடிவி தினகரன் - அடையாறு மாநகராட்சி பள்ளியிலும் வாக்களித்தனர்.
அதேபோல், திமுக மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி கருணாநிதி - டாக்டர்ராதாகிருஷ்ணன் ரோடு சிஎஸ்ஐசெயின்ட் எப்பாஸ் மேல்நிலைப் பள்ளியிலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் - ஆழ்வார்ப்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - நீலாங்கரை அரசு பள்ளியிலும், ஐஜேகே நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி பாஜக வேட்பாளருமான பாரிவேந்தர் - வளசரவாக்கம் லா சாட்லைன் பள்ளியிலும் வாக்களித்தனர்.
மேலும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி - அடையாறு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா - அரும்பாக்கம் குட்ஹோப் பள்ளியிலும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரது மகனும், விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளருமான விஜயபிரபாகரன், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சாலிகிராமம் காவேரி மேல்நிலைப் பள்ளியிலும், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் - சாலிகிராமம் ஜெனரல் கரியப்பா மேல்நிலைப் பள்ளியிலும், மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் - ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும், விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் சரத்குமார் ஆகியோர் கொட்டிவாக்கத்திலும் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்தனர்.
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான நடிகை குஷ்பு - சாந்தோம் மாநகராட்சி பள்ளியிலும், நடிகர் ரஜினிகாந்த், வி.கே.சசிகலா ஆகியோர் ஸ்டெல்லாமேரிஸ் மகளிர் கல்லூரியிலும் வாக்களித்தனர். இசையமைப்பாளர் இளையராஜா - தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் தொடக்கப்பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT