Published : 17 Apr 2024 08:43 PM
Last Updated : 17 Apr 2024 08:43 PM

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.17: தமிழகத்தில் ஓய்ந்த பிரச்சாரம் முதல் துபாய் வெள்ளம் வரை

தமிழகத்தில் ஓய்ந்தது மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, கடந்த மார்ச் 31-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 39 மக்களவைத் தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

“வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணி அலை” - ஸ்டாலின்: “தமிழகத்தில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கான அலை வீசிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திர ஊழல், மோடியின் கிளீன்மோடி என்கிற முகமூடியை கிழித்தெறிந்து மோடியின் ஊழல் முகத்தை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. உடனே மோடி என்ன செய்கிறார்? தன்னுடைய இமேஜே காப்பாற்றிக் கொள்ள, தேர்தல் பத்திரம் வந்த பிறகுதான், யார் யாருக்கு நிதி கொடுக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது என்று வடை சுட ஆரம்பித்துவிட்டார்” என்று சென்னையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தனித்துப் போட்டி ஏன்? - இபிஎஸ் விளக்கம்: மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும் காரணத்தால் அதிமுக தனித்து போட்டியிடுகிறது என்றும், மக்களுக்கு சேவை செய்யும் இந்த இயக்கத்தை அழிப்போம் எனக் கூறுபவர்களின் கனவு பலிக்காது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“பெண்களை திமுகவினர் மிரட்டுகின்றனர்” - சீமான்: “இப்போது திமுகவினர் மகளிரை எப்படி மிரட்டுகின்றனர் தெரியுமா? திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரும் ரூபாய் நின்றுவிடும் என்று கூறி வருகின்றனர்” என்று திருவள்ளூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

‘உச்ச நீதிமன்றத்தையே திமுக நாட வேண்டும்’ - தேர்தல் ஆணையம்: தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அளவிலான குழுவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு நகலை வியாழக்கிழமை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“எந்த ஓர் அரசும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கக் கூடாது”: “நாடு தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால், எந்த ஓர் அரசும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கக் கூடாது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங். தேர்தல் அறிக்கை அம்சங்கள்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டது. ஏழைகளுக்கு இலவச வீடு கட்டித் தரப்படும், ஆண்டுக்கு 10 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், 25 வயது நிரம்பிய அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா படித்தவர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகையுடன் ஓர் ஆண்டு பயிற்சி அளிக்கப்படும், சிஏஏ ரத்து செய்யப்படும், என்ஆர்சி நிறுத்தப்படும், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படாது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

“60 ஆண்டுகளில் காங், முடிக்காததை 10 ஆண்டுகளில் முடித்தேன்”: “காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன். 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன்” என்று அசாமில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்/.

“பாஜகவுக்கு 150 இடங்களே கிடைக்கும்” - ராகுல் கணிப்பு: “பொதுவாக நான் தேர்தலில் வெற்றிக்கான சீட்களை கணிப்பதில்லை. பத்து, இருபது நாட்களுக்கு முன்புவரை பாஜக 180 இடங்களைக் கைப்பற்றும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது 150 இடங்களே கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து வரும் அறிக்கைகளின் படி நாங்கள் முன்னேறி வருகிறோம்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் துபாய்: வறண்ட வானிலையே ஐக்கிய அரபு அமீரக நாட்டின் இயல்பு. ஆனால், செவ்வாய்க்கிழமை பெய்த வரலாறு காணாத கன மழையால் துபாயில் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை சமுத்திரம் போல் காட்சியளித்தது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் வெகுவாக தடைபட்டன.

துபாயின் அடையாளங்களான துபாய் மால், எமிரேட்ஸ் மால் ஆகிய இரு வணிக வளாகங்களுக்கும் மழை நீர் புகுந்தது. துபாயின் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றிலும் தண்ணீர் புகுந்து சேவை பாதிக்கப்பட்டது. ஓராண்டில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாலேயே இந்த நிலை ஏற்பட்டதாக துபாய் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

இந்த திடீர் பெருமழையை மேக விதைப்பு என்ற செயற்கை மழையை உருவாக்குவதற்கான நடைமுறையே தூண்டியிருப்பதாக நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

கிளவுட் சீடிங் எனப்படும் மேக விதைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முன்னோடி நாடுகளில் அமீரகமும் ஒன்று. இந்த முறையைப் பயன்படுத்தி ஆண்டுக்கு பாரசீக வளைகுடாவில் ஆண்டுக்கு சராசரியாக 100 மில்லி மீட்டர் மழைப் பொழிவு தூண்டப்படுகிறது. அதிகரிக்கும் மக்கள் தொகையின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஏபியின் ராம ராஜ்ஜியம் - புதிய இணையதளம்: ‘ஆம் ஆத்மியின் ராம ராஜ்ஜியம்’ என்ற பெயரில் ஆம் ஆத்மி கட்சி புதிய இணையதளத்தைத் தொடங்கி உள்ளது.

எக்ஸ் தளத்துக்கு தடை ஏன்? - பாக். விளக்கம்: பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

“ஒட்டுமொத்த நாடும் தடுப்பு முகாமாக மாறிவிட்டது” - மம்தா சாடல்: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் அவர், "‘பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் தேர்தலும் இருக்காது. அவர்கள் (பாஜக) ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக ஆக்கிவிட்டனர். இதுபோன்ற ஆபத்தான தேர்தலை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை." என்று பாஜகவை சாடியுள்ளார்.

காங்கிரஸுக்கு ராஜ்நாத் கேள்வி: நாட்டின் அணு ஆயுதங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர் தர்ணா: பண பட்டுவாடாவை தடுக்காததை கண்டிப்பதாகக் கூறி புதுச்சேரியில் தேர்தல் அதிகாரி அறை முன்பு அதிமுக மாநிலச் செயலர், வேட்பாளர் ஆகியோர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x