Published : 17 Apr 2024 06:39 PM
Last Updated : 17 Apr 2024 06:39 PM

தமிழகத்தில் ஓய்ந்தது பிரச்சாரம்: இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிய தலைவர்கள்!

சென்னை: தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, கடந்த மார்ச் 31-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 39 மக்களவைத் தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரச்சாரம் நடந்து வந்தது. திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுவதால், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு 48 மணிநேரம் முன்னதாக என்ற அடிப்படையில், இன்று (ஏப்ரல் 17, புதன்கிழமை) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இதையொட்டி, அனைத்து தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பெசன்ட் நகரில் நடந்த இறுதிக்கட்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், மத்திய சென்னை மற்றும் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். | வாசிக்க > “வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணி அலை” - இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புரசைவாக்கம் பகுதியில், இறுதிக் கட்ட பிரச்சாரம் மேற்கொண்டனர். | வாசிக்க > “ரூ.1,000 நிறுத்தப்படும் என பெண்களை திமுகவினர் மிரட்டுகின்றனர்” - சீமான் @ திருவள்ளூர்

சேலத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். | மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டி ஏன்? - இபிஎஸ் விளக்கம்.

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும், சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் இறுதிக் கட்டப் பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும், இந்தத் தேர்தலில் களம் காணும் பல்வேறு கட்சிகளைச் வேட்பாளர்கள், தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வாக்காளர்களிடம் ஆதரவு கோரி வீடியோக்களையும் வெளியிட்டிருந்தனர்.

கட்டுப்பாடுகள் என்னென்ன? - தமிழகத்தில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி விதிமுறைகள் அமலில் இருக்கும். அதன் விவரம்:

> தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது.

> திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை (எஃப்எம்) வானொலி, வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ் போன்ற சாதனங்கள் வாயிலாக எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் மக்களின் பார்வைக்கு வைக்க கூடாது. குறுஞ்செய்தி, இணையம் உள்ளிட்ட மின்னணு வடிவிலான அனைத்து தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

> பொதுமக்களில் எந்த ஒரு நபரையும் ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்துவது, ஏற்பாடு செய்வதன் மூலம் எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் யாரும் பிரச்சாரம் செய்ய கூடாது.

மேற்கண்ட 3 விதிமுறைகள் எந்த விதத்தில் மீறப்பட்டாலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

> தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் உட்பட தொகுதி வாக்காளர்கள் இல்லாத அனைவரும் அத்தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்ட வாகன அனுமதிகள் இனி செல்லாது.

> வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு வேட்பாளரும் அந்த தொகுதி முழுவதும் அவரது சொந்த பயன்பாட்டுக்கான ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டுக்காக தொகுதிக்கு ஒருவாகனம் மற்றும் மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்காக தேர்தல் முகவர், அவரது பணியாளர்கள் அல்லது கட்சி பயன்பாட்டுக்காக ஒரு வாகனம் ஆகியவை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.

> வாக்காளரை அழைத்து வரவும், வாக்குச்சாவடியில் இருந்து திரும்ப அழைத்து செல்லவும் வேட்பாளர் அல்லது அவரது முகவரின் வாகனத்தை வாடகைக்கு எடுக்கவோ, வாங்கவோ, பயன்படுத்தவோ எந்த ஒரு வேட்பாளரும் அனுமதிக்க கூடாது.அவ்வாறு செய்வது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தண்டனைக்குரிய முறைகேடான செயல் ஆகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

10,000 போலீஸார் வருகை: தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகத்துக்கு ஏற்கெனவே வரவழைக்கப்பட்டு மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீஸார் செவ்வாய்க்கிழமை தமிழகம் வந்தடைந்தனர். அவர்கள் தேவைக்கு ஏற்ப பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், ஊர்க்காவல் படையினர் உட்பட மேலும் பல பிரிவினரும் வாக்குப்பதிவு அன்று பணியாற்ற உள்ளனர்.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 511, தென்சென்னையில் 456, தேனியில் 381 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

181 வாக்குச் சாவடிகள் மிக பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன் கூடுதலாக போலீஸாரும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x