பண பட்டுவாடா புகார்: புதுச்சேரியில் அதிமுக மாநிலச் செயலர், வேட்பாளர் தர்ணா

பண பட்டுவாடா புகார்: புதுச்சேரியில் அதிமுக மாநிலச் செயலர், வேட்பாளர் தர்ணா
Updated on
2 min read

புதுச்சேரி: பண பட்டுவாடாவை தடுக்காததை கண்டிப்பதாகக் கூறி புதுச்சேரியில் தேர்தல் அதிகாரி அறை முன்பு அதிமுக மாநிலச் செயலர், வேட்பாளர் ஆகியோர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

புதுவை மக்களவைத் தொகுதியில் பாஜக, காங்கிரஸ், அதிமுக இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. வேட்புமனு தாக்கலுக்கு பிறகு கடந்த 15 நாட்களாக அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். பிரச்சாரத்தில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், பாஜகவுக்கு கண்டெய்னரில் பணம் வந்திருப்பதாக புகார் தெரிவித்தார். தொடர்ந்து காங்கிரஸுக்கும் கட்சி தலைமையில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டி பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், புதுவை முழுவதும் தடையின்றி பண பட்டுவாடா நடைபெறுவதாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டினார். கடந்த 3 நாட்களாக பாஜக சார்பில் வாக்குக்கு ரூ.500, காங்கிரஸ் சார்பில் ரூ.200 விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் புகார் செய்தார்.

இந்த நிலையில் இன்று காலையில் இறுதி நாள் பிரச்சாரத்தையொட்டி அதிமுகவின் வாகன பேரணி நடந்தது. மாநிலச் செயலர் அன்பழகன் தலைமையில் நடந்த ஊர்வலத்தோடு ஆட்சியர் அலுவலகத்துக்கு அவர் வந்தார். ஊர்வலத்தில் வந்தவர்கள் "தடுத்திடு, தடுத்திடு பண பட்டு வாடாவை தடுத்திடு. காத்திடு, காத்திடு ஜனநாயகத்தை காத்திடு" என கோஷம் எழுப்பியபடி ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இருப்பினும் மாநிலச் செயலர் அன்பழகன், வேட்பாளர் தமிழ் வேந்தன் மற்றும் முக்கிய நிர்வாகிகளை போலீஸார் ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். அவர்கள் நேரடியாக முதல் மாடியில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி அறைக்கு வந்தனர். மாவட்ட அதிகாரி குலோத்துங்கன் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்ததால் போலீஸார் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், அதிகாரியின் அறை முன்பு அதிமுகவினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.

தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறுகையில், "வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா நடப்பது தொடர்பாக 2 முறை புதுவை தேர்தல் துறைக்கு புகார் செய்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் புகார் மனு அனுப்பியுள்ளோம். ஆனாலும் பண பட்டுவாடா தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பிட்ட சில இடங்களை கூறி பணம் பட்டுவாடா குறித்து தகவல் அளித்தோம்.

அப்போது அதிகாரிகள், அந்த பகுதி தங்களை சேர்ந்தது இல்லை எனக் கூறி தட்டிக் கழிக்கின்றனர். தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும் என எங்களுக்கு நம்பிக்கையில்லை. வேட்பாளர் உள்துறை அமைச்சராக இருப்பதால் அவருக்கு அரசு எந்திரமும், காவல் துறையும் சாதகமாக செயல்படுகிறது. இதனால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் தேர்தலை நடத்த வேண்டும்” என்றார். இதையடுத்து தேர்தல் அதிகாரி அழைத்தால் தர்ணா போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து அறைக்குள் சென்று சந்தித்து மனு தந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in