Published : 17 Apr 2024 06:05 PM
Last Updated : 17 Apr 2024 06:05 PM

“வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணி அலை” - இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை பெசன்ட் நகரில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

சென்னை: “தமிழகத்தில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கான அலை வீசிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திர ஊழல், மோடியின் கிளீன்மோடி என்கிற முகமூடியை கிழித்தெறிந்து மோடியின் ஊழல் முகத்தை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. உடனே மோடி என்ன செய்கிறார்? தன்னுடைய இமேஜே காப்பாற்றிக் கொள்ள, தேர்தல் பத்திரம் வந்த பிறகுதான், யார் யாருக்கு நிதி கொடுக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது என்று வடை சுட ஆரம்பித்துவிட்டார்” என்று சென்னையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன், தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை ஆதாித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார். பெசன்ட் நகர் பகுதியில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “நாளை மறுநாள் ஏப்.19-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், நம் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போர். நாடு காக்கும் இந்த ஜனநாயகப் போரில், இண்டியா கூட்டணிக்கு வெற்றி தேடித் தர தமிழகத்தின் தலைமகனான அண்ணாவை, முதன்முதலாக தேர்ந்தெடுத்து அனுப்பிய தென் சென்னை தொகுதிக்கு வந்திருக்கிறேன். தலைநகரில், தமிழக மக்களுக்கு இறுதி அறைகூவல் விடுக்கிறேன்.

கடந்த 22 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து இருக்கிறேன். மக்களின் முகத்தில் தெரியும் எழுச்சியும், மகிழ்ச்சியையும் வைத்து கூறுகிறேன், நாற்பதுக்கு நாற்பதும் நாம் தாம் வெல்லப் போகிறோம். நாட்டையும் நம்முடைய கூட்டணிதான் ஆளப்போகிறது. காரணம், தமிழகத்தில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கான அலை வீசிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் சர்வாதிகார மனப்பான்மை. மாநிலங்களை நசுக்கும் எதேச்சதிகாரம். ஒற்றுமையாக வாழும் மக்களிடையே, பிளவை உருவாக்கும் மதவாதப் பேச்சு. எதிர்க்கட்சிகளை ஒடுக்க எண்ணுகிற பாசிச எண்ணம்.

எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில், பழங்குடியினத்தைச் சார்ந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்து சிறையில் அடைத்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலையும் சிறையில் அடைத்திருக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் என்பது சமமான களமாக இருந்தால், படுதோல்வி நிச்சயம் என உணர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் வங்கிக் கணக்கை முடக்குகிற தீய செயல்களில் ஈடுபட்டார். மக்களைப் பற்றி சிந்திக்காமல், கார்ப்பரேட்டுகளுக்காக மட்டுமே சிந்தித்து திட்டங்களைத் தீட்டியதால், விலைவாசி உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டுகிற அளவுக்கு இன்றைக்கு உயர்ந்திருக்கிறது.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்து ஆட்சியமைத்த மோடி, இந்த 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்தாரா? இல்லை. இந்த கேள்வியைக் கேட்டால், இளைஞர்களை பக்கோடா சுட சொன்னவர்தான் மோடி. இப்போது நடுநிலை வாக்காளர்களும் பாஜகவின் உண்மை முகத்தைத் தெரிந்துகொண்டு, வெறுக்கத் தொடங்கி விட்டனர்.

தேர்தல் பத்திர ஊழல், மோடியின் கிளீன்மோடி என்கிற முகமூடியை கிழித்தெறிந்து மோடியின் ஊழல் முகத்தை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. உடனே மோடி என்ன செய்கிறார்? தன்னுடைய இமேஜே காப்பாற்றிக் கொள்ள, தேர்தல் பத்திரம் வந்த பிறகுதான், யார் யாருக்கு நிதி கொடுக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது என்று வடை சுட ஆரம்பித்தார்.

பிரதமர் மோடி அவர்களே, உச்ச நீதிமன்றம் முதலில் பட்டியல் கேட்டபோதே ஏன் தரவில்லை? தேர்தலை சந்திக்க எல்லாக் கட்சிகளும்தான் நிதி வாங்குகின்றனர். இங்கு நிதி வாங்கியது பிரச்சினை கிடையாது. அதை எப்படி வாங்கினீர்கள்? அமாலக்கத்துறை, வருமான வரித் துறை, சிபிஐ ஆகியவைகளை கூட்டணி போல செயல்படுகிற அமைப்புகளை வைத்து தொழில் நிறுவனங்களுக்கு ரெய்டு செல்வது, அடுத்த சில நாட்களில் அந்த நிறுவனங்களிடமிருந்து பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக நிதி வாங்கப்பட்டுள்ளது. பின்னர், அந்த நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று ஒரு மறைமுக சங்கிலித் தொடர்பு இருக்கிறதே அதுதான் பிரச்சினைக்குரியது.

முன்னணி ஊடகங்கள் இதுகுறித்து பேச மறுத்தாலும், தனிநபர் பலரும், உச்ச நீதிமன்ற அழுத்தத்தால் வெளியான பட்டியல்களை ஆய்வு செய்து சில ஊடகங்களில் பாஜகவின் தில்லமுல்லு அம்பலமானது. இந்த நாடு எத்தனையோ பிரதமர்களை பார்த்துள்ளது. ஆனால், மோடி போல வசூல் வேட்டையில் ஈடுபட்ட வசூல்ராஜாவை பார்த்தது இல்லை. கரோனாவில் கூட வசூல் வேட்டை நடத்தினார். அதற்கு என்ன பெயர் வைத்தார் தெரியுமா? பி.எம்.கேர்ஸ் நிதி. அனைவரும் நிதி உதவி செய்யுமாறு கேட்டார். மக்களுக்கு உதவுவதற்காகத்தான் பிரதமர் கேட்கிறார் என்று, பலரும் அள்ளிக் கொடுத்தனர். அந்த நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டால், அது தனியார் அறக்கட்டளை, அந்த விபரம் எல்லாம் சொல்ல முடியாது என்று பதில் வருகிறது.

அடுத்தது உங்களது ஆட்சிக்கு சிஏஜி கொடுத்த சர்டிபிகேட் என்ன? இதைப்பற்றி ஏன் வாயே திறக்கமாட்டேன் என்கிறீர்கள்? இதை வெளியிட்ட தணிக்கைத்துறை அதிகாரிகள் மூன்று பேரை, உடனே பணியிடமாற்றம் செய்த மர்மம் என்ன? அடுத்து ரபேல் ஊழல், காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்துக்கு ரூ.526 கோடிக்கு ஒப்பந்தம் போட்டால், பாஜக ஆட்சியில் ரூ.1620 கோடிக்கு வாங்கினார்கள். இதனால், பயனடைந்தது யார்? என்று காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு பிரதமர் இன்றுவரை பதில் சொல்லவில்லை.

கார்ப்பரேட் முதலாளிகளுக்காக எப்படி அரசை நடத்துகிறீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய போது, பதில் சொல்லாமல் அவர் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமா அவருடைய எம்.பி. பதவியை பறித்தனர்.

இவ்வளவும் செய்துவிட்டு பிரதமர் மோடி ஊழல் பற்றி பேசலாமா? அதனால்தான் சொன்னேன். உண்மையிலேயே ஊழலுக்கு பல்கலைக்கழகம் கட்டி அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டும் எனில், மோடியை விட்டு அதற்கு யாருமே கிடையாது. ஏனெனில், ஊழலை சட்டபூர்வமாக்கியவர் மோடிதான்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x