Published : 12 Apr 2024 04:10 AM
Last Updated : 12 Apr 2024 04:10 AM

“தெற்கு தேயவில்லை... தேய்க்கப் பார்க்கிறீர்கள்!” - கமல்ஹாசன் பிரச்சாரம்

மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து ஆனையூர் பகுதியில் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: நாட்டின் பல மாநிலங்களில் எய்ம்ஸை உருவாக்க முடிந்த உங்களால் அதை இங்கு ஏன் செய்ய முடியவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை ஆனையூர், கோ. புதூரில் நேற்றிரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: ஒருவருக்கு ஒருவரைத் திட்டிக்கொள்வது அரசியலாக இருக்கக் கூடாது. திருத்திக் கொள்வதே அரசியலாக இருக்க வேண்டும். எம்பி.க்களுக்கான நிதி ஒதுக்கீடு இல்லாத நேரத்திலும் பல நல்ல காரியங்களை சு.வெங்கடேசன் செய்துள்ளார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தர வேண்டும். அவர் மக்களுக்கு செய்த பணிகள் தொடர்பான தகவல்களை திரட்டி வீடியோ ஆவணம் தயாரித்துள்ளார். அதை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

கீழடி அருங்காட்சியம், கலைஞர் நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் என பல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரைக்குத் தந்துள்ளார். அமெரிக்காவில் கூடைப் பந்து விளையாடுவர். ஆனால், அகில உலக கூடைப் பந்து போட்டி என பிரபலப்படுத்திக்கொள்வர். அதேபோல் அகில உலக ஜல்லிக்கட்டு தலைநகராக அலங்காநல்லூரைச் சொல்லலாம். கீழடி மனிதர்களின் கலச்சாரம். உலக கலாச்சாரத்தின் ஒரு பகுதி. அதைப் போற்றிக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை.

நல்லவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் என்னவாகும் எனச் சொல்லியுள்ளேன். கல்வி உரியவர்களிடம் போய்ச்சேரும். 100 ஆண்டுகளுக்கு முன்பு காந்தியால் மட்டுமே இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்ட முடியும். நாம் செய்யும் நல்ல காரியங்கள் நாடெங்கும் பரவ வேண்டும். மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் போன்ற நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தொழிற் சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர்.

இது எப்படி சாத்தியமானது. நல்ல அரசியல் நடந்ததால்தான் இது சாத்தியம். குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் எய்ம்ஸை உருவாக்க முடிந்த உங்களுக்கு, அதை இங்கு (மதுரை) ஏன் செய்ய முடியவில்லை. உதயநிதி ஒரு செங்கல்லை எடுத்துக் காட்டியதும் கட்டாத கட்டிடத்தின் அஸ்தி வாரம் ஆடிப் போனது. விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அமைச்சர் உதயநிதி மேற்கொண்டுவரும் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்.

புழக்கத்தில் இல்லாத சம்ஸ்கிருத மொழிக்கு ஒதுக்கும் நிதியை பல கோடி மக்கள் பேசும் தமிழ் மொழிக்கும் ஒதுக்குங்கள் எனக் கேட்கிறோம். அண்ணா சொன்னதுபோல் தெற்கு தேயவில்லை, தேய்க்கப் பார்க்கிறீர்கள். தயவு செய்து அதைச் செய்யாதீர்கள். மக்களை பிளவுபடுத்தப் பார்க்கிறீர்கள். பிளவுபடுத்த நினைத்தால் தமிழகம் பிளவுபடாது. மறதி ஒரு தேசிய வியாதி. நல்லதை எண்ணி நல்லவருக்கு ஓட்டளியுங்கள். கல்வி தான் நமது ஆயுதம். உயர்கல்வி பெறுவதில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

அனைவருக்கும் அனைத்தையும் கிடைக்கச் செய்வதுதான் திராவிட மாடல். ஜனநாயகமும், பொதுவுடைமைச் சித்தாந்தமும் வேறு வேறு என்கின்றனர். இரண்டும் ஒரே விஷயத்தைத்தான் பேசுகிறது. இரு சித்தாந்தத்தையும் எடுத்து மக்கள் நகர்ந்தால் இதுதான் எங்கள் நீதி. அதுதான் சமூக நீதி. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x