Published : 12 Mar 2025 12:40 AM
Last Updated : 12 Mar 2025 12:40 AM

விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை: மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் முடிவு

கோப்புப் படம்

தமிழகத்தில் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதன் செயல்பாடுகள், வர்த்தக நடவடிக்கைகளை மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகரம் கண்காணிக்கிறது. குறிப்பாக, மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்று சோதனை மேற்கொள்கிறது. அதேபோல், முறைகேடுகளோ, விதிமீறல்களோ கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

தனியாரால் நடத்தப்படும் மருந்தகங்கள் ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் தமிழகத்தில் 1,100-க்கும் மேற்பட்ட பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சந்தை விலையை காட்டிலும் குறைவாக மருந்துகள் விற்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் பிரதமரின் மக்கள் மருந்தகங்களிலும் மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில், சில கடைகளில் முறையாக ஆவணங்களை பராமரிக்காமல் இருந்ததும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்றதும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதர் கூறுகையில், “மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்வது தவறானது. அதிலும், சில முக்கிய மருந்துகளை அவ்வாறு விற்பனை செய்வது சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தற்போது வரை விதிகளுக்கு புறம்பாக மருந்து விற்பனையில் ஈடுபட்ட 17 மக்கள் மருந்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 8 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மற்றவர்களின் விதிமீறல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் மருந்தகங்களை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தரமான மருந்துகள் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் நோக்கம் ஆகும். பிரதமரின் மக்கள் மருந்தகம் மட்டுமல்ல, வரும் நாள்களில் முதல்வர் மருந்தகங்களிலும் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x