Last Updated : 12 Apr, 2024 11:16 AM

1  

Published : 12 Apr 2024 11:16 AM
Last Updated : 12 Apr 2024 11:16 AM

‘ஸ்டார் தொகுதி’ ராமநாதபுரம் கள நிலவரம் என்ன?- ஓர் அலசல் 

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதால், இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், திருவாடானை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருச்சுழி ஆகிய தொகுதிகளை திமுகவும், திருவாடானை, அறந்தாங்கி தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும் வென்றன.

ஒரு தொகுதியைக்கூட அதிமுக, பாஜக கூட்டணி கைப்பற்றவில்லை. கடந்த 1957 முதல் நடந்த மக்களவைத் தேர்தலில் 5 முறை காங்கிரஸும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும், தமாகா, பார்வர்ட் பிளாக், சுயேச்சை வேட்பாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

பார்வர்ட் பிளாக்கில் மூக்கையாத் தேவர், 1967-ல் சுயேச்சை வேட்பாளர் முகம்மது ஷெரீப், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, அன்வர்ராஜா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மலைச்சாமி, திமுகவில் நடிகர் ரித்தீஷ், திமுக பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த சத்தியேந்திரன், பவானி ராஜேந்திரன், 1984, 1989, 1991 என காங்கிரஸில் தொடர்ந்து 3 முறை ராஜேஸ்வரன் ஆகியோர் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 4,69,943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட 1,27,122 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

இத்தேர்தலில் அமமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனின் மகன் ஆனந்த் 1,41,806 வாக்குகள் பெற்றதால், நயினார் நாகேந்திரன் வெற்றி வாய்ப்பை இழந்தார். மேலும் நாம் தமிழர் வேட்பாளர் புவனேஸ்வரி 46,385 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் விஜய பாஸ்கர் 14,925 வாக்குகளும் பெற்றனர்.

தொகுதி பிரச்சினைகள்: தொகுதியின் மிகப்பெரிய பிரச்சினையாக இன்றளவும் குடிநீர் பிரச்சினை உள்ளது. கடந்த 2010-ல் திமுக அரசால் ரூ. 616 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்தும், அந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் தற்போது வரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது.

இம்மாவட்டத்தில் தொழிற்சாலை என்பதே இல்லை. அதனால்தான் இங்குள்ள இளைஞர்கள் நகரங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அதிகளவில் வேலை தேடிச் செல்கின்றனர். இதுவரை இத்தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் எந்த தொழிற்சாலையையும் கொண்டு வரவில்லை.

அதனால் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இங்கு குடிநீர் பிரச்சினையும், வேலைவாய்ப்பின்மையும் தீரவில்லை. இந்தியா - இலங்கை நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி இருநாட்டு மீனவர்களும் சுமூகமாக மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் போன்ற தலையாய பிரச்சினைகள் நீண்ட காலமாக உள்ளன.

மேலும் உடான் திட்டத்தில் ராமநாதபுரத்தில் விமான நிலையம், மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி-தனுஷ்கோடி இடையே இன்னும் நான்கு வழிச்சாலை அமைக்காதது போன்றவை நீண்டகால குறைகளாக உள்ளன.

இத்தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக கூட்டணியில் தற்போதைய எம்பியான நவாஸ் கனி, அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சியில் சந்திரபிரபா ஜெயபால் மற்றும் 21 சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 25 பேர் போட்டியிடுகின்றனர்.

நவாஸ் கனி எம்பி தொகுதிக்கு பெரிய அளவில் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், எதிர்க்கட்சி எம்பியாக இருந்ததால் எந்த திட்டமும் மத்திய அரசால் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும், பெரும் பலம்வாய்ந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சுறுசுறுப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நவாஸ் கனி.

ஓபிஎஸ் முன்னாள் முதல்வர் என்பதால் அனைத்து மக்களுக்கும் தெரிந்த நட்சத்திர வேட்பாளராக வலம் வருகிறார். மேலும் அவருக்கு இத்தொகுதியில் சமுதாயரீதியான வாக்குகளும், பல தரப்பு மக்களும், அதிமுகவில் உள்ள ஒரு தரப்பினர் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. தனது அரசியல் எதிர்காலத்துக்கு இந்த தேர்தல் முக்கியமானது என்பதால் ஓபிஎஸ் வாக்குகளை பெறுவதில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்.

அதேபோல் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள அதிமுக வேட்பாளர் ஜெயபாலும் போட்டியில் உள்ளார். பாரம்பரிய எதிர்க்கட்சி மற்றும் அதிமுகவின் கட்டமைப்பும் சின்னமும் அவருக்கு சாதகமாக உள்ளன. அவருக்கு ஆதரவாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் களமாடி வருகின்றனர்.

அரசியல் எதிரியான ஓபிஎஸ்ஸை தோற்கடித்தாக வேண்டும் என்பதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தீவிரம் காட்டி வருவதால் தொகுதியில் பிரச்சாரம் சூடு பறக்கிறது. மீனவர் பிரச்சினை, தமிழர் உரிமை, கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபா ஜெயபால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஆண் வாக்காளர்கள்: 7,97,012

பெண் வாக்காளர்கள்: 8,08,955

மூன்றாம் பாலினத்தவர்கள்: 83

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x