Published : 06 Apr 2024 08:10 AM
Last Updated : 06 Apr 2024 08:10 AM
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைச்சரிடம் புகார் தெரிவித்த கிராம மக்கள் மீது, அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் உரத்துப்பட்டியில் வாக்கு சேகரிக்கச் சென்றார்.
அமைச்சர் காரில் இருந்து இறங்கியவுடன் அங்கிருந்த கிராம மக்கள் சிலர், ‘உரத்துப்பட்டி - மேலவண்ணாரிருப்பு சாலை பணிபாதியில் நிறுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால் சாலையில் மக்கள் செல்ல முடியவில்லை. அவ்வழியாக பேருந்தும் நிறுத்தப்பட்டது. நீங்கள் இந்த சாலை வழியாகச் சென்று பார்த்தால்தான், உங்களுக்கு கஷ்டம் தெரியும்’ என்று புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு, அமைச்சர் பிரச்சாரத்துக்குச் சென்றார். ஆனால், அமைச்சருடன் வந்திருந்தவர்கள், புகார் தெரிவித்த கிராமத்தினரை திடீரென தாக்கினர். இதில் காயமடைந்த கிராம மக்கள், அமைச்சருடன் வந்த வெளியூர் நபர்கள் தங்களை தாக்கிவிட்டதாக, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக ஒன்றியத் தலைவர் செல்வராஜிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து செல்வராஜ், திமுக ஒன்றியச் செயலாளரின் காரை வழிமறித்து, "உள்ளூர் நபர்களை எப்படி வெளியூர் நபர்கள் தாக்கலாம்?" என்று ஆவேசமாகக் கேட்டார். தொடர்ந்து, மற்றொரு காரில் இருந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் இறங்கி வந்து, செல்வராஜையும் தாக்கினர். உடனே, அங்கிருந்தவர்கள் மற்றும் போலீஸார் இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.
இந்த சம்பவத்தில் அமைச்சர் ஆதரவாளர்கள் தாக்கியதில் காயமடைந்த அழகப்பன் (35), ராசு (34), பாஜக நிர்வாகி செல்வராஜ் உள்ளிட்ட 5 பேர் பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல, கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறி, அமைச்சரின் ஆதரவாளர்களான விக்னேஷ்பிரபு, விஸ்வநாதன் ஆகியோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த அழகப்பன், ராசு ஆகியோர் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உலகம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT