Published : 04 Apr 2024 05:44 AM
Last Updated : 04 Apr 2024 05:44 AM
சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக டெல்லியில் திரைப்பட இயக்குநர் அமீரிடம் என்சிபி போலீஸார் 12 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு போலீஸார் வியூகம் அமைத்துள்ளனர்.
உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் ஜாபர் சாதிக்கைது செய்யப்பட்டார். அவர்அளித்த வாக்குமூலம் அடிப்படையில், தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குநருமான அமீருக்கு என்சிபி போலீஸார் சம்மன் வழங்கினர். அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் கடந்த 2-ம் தேதி காலை 8 மணி அளவில் ஆஜரானார். வழக்கறிஞர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
நண்பகல் 12 மணி அளவில் அமீரிடம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக நள்ளிரவு வரை விசாரணை நீடித்தது. அமீர் அளித்த பதில்களை போலீஸார் வீடியோவாக பதிவுசெய்துள்ளனர். எழுத்துப் பூர்வமாகவும் வாக்குமூலத்தை பெற்றனர்.
தேவைப்பட்டால், விசாரணைக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமீரை போலீஸார் அனுப்பிவைத்தனர். அதற்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது அவரதுவாக்கு மூலத்தின் அடிப்படையில் டெல்லி என்சிபி போலீஸார் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வியூகம் அமைத்து வருகின்றனர்.
‘என்னை அழைக்க வேண்டாம்’: அமீர் வெளியே வந்த தகவல் கிடைத்ததும், செய்தியாளர்கள் பலரும் செல்போனில் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அழைப்புகளை அவர் ஏற்கவில்லை.இந்நிலையில், தனது செல்போன் ஸ்டேட்டஸ் பதிவு மூலம் தெரிவித்துள்ளதாவது: அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். 2-3 நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதுவரை யாரும் என்னை அழைக்க வேண்டாம். அன்புடன் அமீர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT