Published : 04 Apr 2024 07:34 AM
Last Updated : 04 Apr 2024 07:34 AM

ஸ்ரீபெரும்புதூரில் திமுக - அதிமுக - தமாகா இடையே கடும் போட்டி

தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை கைப்பற்றுவதில், அதிமுக, திமுக, தமாகா வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. 10-வது முறையாக ஸ்ரீபெரும்புதூரை கைப்பற்ற திமுக தீவிரம் காட்டி வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைதொகுதியில் ஆண் வாக்காளர்கள் -11,75,997, பெண் வாக்காளர்கள்-11,97,060, மூன்றாம் பாலின வாக்காளர்கள் - 429. ஆக மொத்தம் -23,73,486 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் எண்ணிக்கை 7,810 மற்றும், 85 வயது நிரம்பியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 24,654 பேர் அடங்குவர். இதேபோல் ராணுவ வீரர்கள் 455 பேர் உள்ளனர். முதல்முறை வாக்காளர்களில் ஆண்கள்–16,497, பெண்கள்-14,551, மூன்றாம் பாலினத்தவர்ஒருவர்.

நீண்டகாலமாக தனி தொகுதியாகஇருந்த தொகுதி, மறுசீரமைப்புக்கு பிறகு பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது. இந்த தொகுதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளது. 1962 முதல் மக்களவைத் தேர்தலை இந்த தொகுதி சந்தித்து வருகிறது. இத்தொகுதியில் திமுக 9 முறையும், காங்கிரஸ், அதிமுக தலா 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சியின் மரகதம் சந்திரசேகர் தொடர்ந்து இந்தத் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தொகுதியில் தற்போது திமுக சார்பில் டி.ஆர். பாலு, அதிமுக -மருத்துவர் ஞா.பிரேம்குமார், தமிழ்மாநில காங்கிரஸ் - வி.என்.வேணுகோபால், நாம் தமிழர் கட்சி - வெ.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 31 பேர் களத்தில் உள்ளனர். இதில் திமுக, அதிமுக,தமாகா, நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக களம் கண்டு வருகின்றன.

டி.ஆர். பாலு (திமுக) - டி. ஆர். பாலு தொகுதியில் அனைத்து தரப்பு மக்களிடம் நன்கு அறிமுகம் ஆனவர். திமுகவின் பொருளாளராக இருப்பதால் ௮க்கட்சியினர் இவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என, தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டி.ஆர்.பாலுக்கு வயது, 86 ஆனாலும் அவர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஆலந்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்ரீபெரும்புதூர்
திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு.

ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வந்து பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதையும், தொகுதியில் உட்கட்டமைப்பு வசதியை சிறப்பாக செய்ததையும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் தெரிவித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஞா.பிரேம்குமார் (அதிமுக) - அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரேம்குமார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை சாராதவர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் வசித்து வரும் இவர் தொகுதிக்கு புதியவர். அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை மட்டுமே இவர் தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

அனகாபுத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர்
மருத்துவர் ஞா. பிரேம்குமார்.

முன்னாள் முதல்வர் பழனிசாமி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தினமும் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கும் இவர், திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை முற்றிலுமாக கவர வேண்டும் என்ற நோக்கில் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுகிறார்.

வி.என்.வேணுகோபால் (தமாகா) - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிசார்பில் போட்டியிடும் வேணுகோபால், அனைத்து கட்சியினரிடமும் நன்கு அறிமுகம் ஆனவர். மேலும், தாம்பரம் நகராட்சியில் ஏற்கெனவே கவுன்சிலராக இருந்தவர். தற்போதுமாநகராட்சியில் இவரது மனைவிமாமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார். தொகுதி பிரச்சினைகளையும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.

தமாகா வேட்பாளர் வேணுகோபாலுக்கு ஆதரவாக ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தில்
ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராம தாஸ்.

மத்திய மோடி அரசின் சாதனைகளை மட்டுமே கூறி வாக்கு சேகரிக்கும் இவர், திமுகவின் தவறுகளையும் சுட்டிக்காட்டி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். இவருக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன், அன்புமணி ராமதாஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏற்கெனவே பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

வெ. ரவிச்சந்திரன்

நாம் தமிழர் கட்சி: தொகுதியில் மும்முனை போட்டிக்கு இடையே நாம் தமிழர் வேட்பாளர் வெ. ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். உடல்நிலை சரியில்லாததால் நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. மாறாக கட்சி நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளின் தவறுகளை சுட்டிகாட்டி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளும் நிலவி வருகின்றன.

அதிக தொழிற்சாலைகள் கொண்ட ஸ்ரீபெரும்புதூருக்கு ரயில் சேவை இல்லை. தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க மேம்பாலம், சுரங்கப்பாதைகள் தேவை போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பிரச்சாரம் செய்கின்றனர்.

திமுகவின் வசம் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை இம்முறை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x