Last Updated : 29 Mar, 2024 01:50 PM

 

Published : 29 Mar 2024 01:50 PM
Last Updated : 29 Mar 2024 01:50 PM

“இலவச மனைப்பட்டா வழங்குங்கள்” - பிரச்சாரக் களத்தில் முதல்வர் ரங்கசாமியிடம் முறையிட்ட பெண்கள்

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த முதல்வர் ரங்கசாமியிடம், ரேஷன் கடைகளை திறந்து அரிசி கொடுங்கள், இலவச மனைப்பட்டா வழங்குங்கள், மின்சார கட்டணயம் உயர்ந்துவிட்டது, முதியார் உதவித்தொகையை உயர்த்துங்கள் என்று பல அடுக்கடுக்கான கோரிக்கைகைளை பிரச்சார கூட்டத்தில் கூடியிருந்த பெண்கள் முறையிட்டனர்.

புதுச்சேரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி இன்று அரியாங்குப்பம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அரியாங்குப்பம் சந்திப்பில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, “யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசின் அனுமதி பெற்றுத்தான் திட்டங்களை செய்ய வேண்டும்.

அப்படியானால் மத்தியில் யார் ஆட்சிக்கு வருவார்கள். யார் ஆட்சி செய்கின்றனர். எந்த கட்சியின் எம்.பி இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால் நமக்கு நிதி கிடைக்கும், பல திட்டங்கள் கொண்டுவர முடியும் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை எம்பியாக காங்கிரஸ் கட்சியின் வைத்திலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 ஆண்டுகளில் அவரால் ஏதேனும் செய்ய முடிந்ததா? நாடாளுமன்றத்தில் பேச முடிந்ததா? முடியவில்லை. மீண்டும் அவர் சென்றால் அதே நிலைதான் இப்போதும் ஏற்படும்.

400 இடங்களுக்குமேல் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி வருவார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதனை எந்த எதிர்கட்சியினரும் மறுக்க முடியாது. இண்டியா கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லை. அவர்களால் 100 இடங்களுக்கு மேல் பெற முடியுமா என்பதே சந்தேகம் தான்.

நம்முடைய வாக்குகள் மிக முக்கியமானது. அது பயனுள்ளதாக இருக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மத்தியில் அமைய இருக்கின்றது. ஆகவே, புதுச்சேரி மாநிலம் முன்னேற்றம் அடைய நம்முடைய தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் ஏதேனும் வேலை நடந்ததா? திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா? முதியோர் உதவித்தொகை உயர்த்தப்பட்டதா? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டடதா? என்றால் இல்லை. ஆனால் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தினோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம். இன்னும் 2 ஆண்டுகள் ஆட்சி இருக்கிறது. அதில் இன்னும் பலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்” என்றார்.

முதல்வரிடம் முறையிட்ட பெண்கள்: தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி பேசிக்கொண்டே இருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள், “ரேஷன்கடைகளை திறந்து அரிசி போடுங்கள். பணம் கொடுப்பதால் வீட்டில் உள்ள ஆண்டுகள் எப்போதும் சாராயக்கடைகளிலேயே இருக்கின்றனர். சாராயக்கடை, மதுக்கடைகளை மூடுங்கள்.

இலவச மனைப்பட்டா பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. ஆகவே இலவச மனைப்பட்டா வழங்குங்கள், முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி கொடுங்கள், மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது, கேஸ் மானியம் கிடைப்பதில்லை" என்று அடுக்கடுக்கான கோரிக்கைகளை கூறி, முதல்வர் ரங்கசாமியை நோக்கி கைகளை நீட்டியபடி முறையிட்டுக் கொண்டிருந்தனர்.

முதல்வரும் அதனை கேட்டபடியே பேசிக்கொண்டு இருந்தார். அங்கிருந்த கட்சியினர் சிலர் அந்த பெண்களிடம், ‘எல்லாவற்றையும் செய்வார்கள். அமைதியாக இருங்கள்’ என்று கூறி சமாதானம் செய்தனர். அச்சமயம் முதல்வர், ‘உங்கள் வீட்டுக்காரர்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று பதில் அளித்தார்.

அப்போது அங்கு சிரிப்பலை ஏற்பட்டது. தொடர்ந்து முதல்வர், ‘புதுச்சேரியில் ரேஷன்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்டவைகள் முன்பு வழங்கப்பட்டது. நிச்சயம் ரேஷன் கடைகளை திறக்க அரசு முயற்சி செய்யும். வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு வாக்கு அளியுங்கள்’ என்று கூறி பேசி முடித்து அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் தொடர்ந்து வீராம்பட்டனம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சார வாகனத்தல் நின்றபடியே டீ குடித்த முதல்வர்: அரியாங்குப்பம் பகுதியில் பிரச்சாரம் செய்த முதல்வர் ரங்கசாமி, வேட்பாளர் நமச்சிவாயத்தை வழி நெடுகிலும் மலர் தூவியும், தேங்காய் உடைத்தும், பூசணிக்காய் சுற்றியும் மேலதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வாகனத்தில் நின்றபடி பிரச்சாரம் செய்த முதல்வர் அங்கிருந்து அரியாங்குப்பம் சந்திப்பை நோக்கி சென்றார். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் தொண்டர்கள் முதல்வர் ரங்கசாமி, வேட்பாளர் நமச்சிவாயம், எம்எல்ஏ பாஸ்கர் ஆகியோருக்கு டீ வாங்கி கொடுத்தனர். அதனை பிரச்சார வாகனத்தில் நின்றபடியே அவர்கள் குடித்துவிட்டு அங்கிருந்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x