Last Updated : 27 Mar, 2024 06:30 PM

 

Published : 27 Mar 2024 06:30 PM
Last Updated : 27 Mar 2024 06:30 PM

மதுரையின் முதல் பெண் நடத்துநர் ரம்யா - அரசால் உடனடி பலன் கிட்டியதாக நெகிழ்ச்சி

மதுரையின் முதல் பெண் நடத்துநர் ஆன ரம்யா

மதுரை: மதுரையின் முதல் நடத்துநராக மதுரையை சேர்ந்த ரம்யா நியமிக்கப்பட்டுள்ளார். “கணவர் இறந்த நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தேன். என் கோரிக்கை குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது” என்றார்.

தமிழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த வசந்தகுமாரி. இவரை அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக 1993-ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நியமித்தார். இவர் தற்போது ஓய்வு பெற்று விட்டார். சென்னை, விழுப்புரத்தில் பெண்கள் கருணை அடிப்படையில் நடத்துநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் முதல் பெண் நடத்துனராக ரம்யா (38) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை கோ.புதூர் லூர்து நகரைச் சேர்ந்தவர் ரம்யா. இவரது கணவர் பாலாஜி. இவர்களுக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். பாலாஜி கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் காரைக்குடி மண்டலத்தின் மதுரை உலகநேரி கிளையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கரோனாவில் பாலாஜி உயிரிந்தார். இதனால் கருணை வேலை கேட்டு ரம்யா விண்ணப்பித்தார். அதோடு தனது குடும்ப கஷ்டத்தை விளக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனுவும் அனுப்பினார். அதில், ஓட்டுநர் பணி தவிர்த்து வேறு எந்த பணி வழங்கினாலும் சிறப்பாக மேற்கொள்வதாக ரம்யா குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ரம்யாவுக்கு கருணை வேலை வழங்க போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு முதல்வர் பரிந்துரைத்தார். ரம்யாவின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அவருக்கு உடனடியாக கருணை பணி வழங்க போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து ரம்யாவுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநர் பணி வழங்கப்பட்டது.

தமிழக அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் மதுரை உலகநேரி கிளையில் நடத்துநராக ரம்யா பணியில் சேர்ந்தார். அவருக்கு மதுரை - ராமேஸ்வரம் பேருந்தில் நடத்துனர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரம்யாவுக்கு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மகேந்திரகுமார் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து ரம்யா கூறுகையில், “கணவர் இறந்த நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தேன். என் கோரிக்கை குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. கணவர் ஓட்டுநராக பணிபுரிந்த கிளையிலேயே எனக்கு நடத்துநர் பணி கிடைத்துள்ளது. பெண்களால் அனைத்து பணிகளையும் திறம்பட செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக என் பணி இருக்கும். என்னைப் போல் பெண்கள் ஏராளமானோர் நடத்துநர் பணியில் சேர முன்வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x