Published : 27 Mar 2024 05:09 PM
Last Updated : 27 Mar 2024 05:09 PM

‘நாடகக் காதல்’ தடுப்பு - பாமக வாக்குறுதிக்கு அன்புமணி, ராமதாஸ் விளக்கம்

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்வு. | படம்: ஜோதி ராமலிங்கம்

சென்னை: ‘நாடகக் காதலால் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கவும் 21 வயதுக்கு கீழானவர்கள் திருமணத்துக்கு இரு தரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்’ என்று பாமக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதி குறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

பாமக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்துக்குப் பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் கர்நாடக உயர் நீதிமன்றமும் இதனை வலியுறுத்தியுள்ளது. மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்துக்கு இருதரப்புப் பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்.

இளம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் அதிகரித்து வருகிறது. குடும்ப முன்னேற்றம் மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைக்கும் செல்லும் பெண்கள் ஆபாச அர்ச்சனைகளாலும், பாலியல் அத்துமீறல்களாலும் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் ஆசை வார்த்தை கூறி அறியாத வயதில் ஏமாற்றப்பட்டு, மோசம் செய்யப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாலியல் சீண்டல்களையும், வன்கொடுமைகளையும் அடியோடு ஒழிக்கவும், பெண்கள் முழுமையான பாதுகாப்புடன் வாழும் சூழலை உருவாக்கவும் பாடுபடுவோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அன்புமணி, "25 வயது வரை உள்ளவர்களுக்கு பெற்றோர் அனுமதி தேவை. அதற்கு மேல் உள்ளவர்களுக்கு தேவை கிடையாது. ஒரு பெண்ணுக்கு 18 வயது என்பது மிக இளம் வயது. எங்களை பொறுத்தவரை 18 வயது உள்ளவர்களை குழந்தைகளாக பார்க்கிறோம்.

18 வயது வந்தவுடன் திருமணம் முடித்துவிட்டால் அந்தப் பெண்ணுக்கு எதிர்காலமே கிடையாது. தருமபுரி போன்ற இடங்களில் இளம் தாய்மார்களை பார்த்துள்ளேன். அப்படிப்பட்ட தாய்மார்களுக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் நிறைய வருகிறது. சிங்கப்பூர், பிரேசில் போன்ற நாடுகளில் பெற்றோர்கள் சம்மததுடன்தான் திருமணம் என்கிற நிலைப்பாடு இருக்கிறது. அதனை தான் நாங்களும் சொல்கிறோம்.

அப்படி இல்லை என்றால், ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வயது 21 என்று சட்டம் கொண்டு வாருங்கள். அப்படி சட்டம் வரும்வரை பெற்றோர்கள் ஒப்புதல் தேவை என்று சொல்கிறோம்" என்று அன்புமணி தெரிவித்தார்.

இதே கேள்விக்கு பதிலளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், "காதலோ, இல்லையோ பெற்றோர்கள் ஒப்புதல் தேவையா இல்லையா. காதலிக்கிறோம் என்பதை பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும். ஹார்மோன் சமநிலையின்மை என்று சொல்வார்கள். ஹார்மோன் சமநிலையின்மையின்போது காதல் வயப்படுவது சகஜம். ஆனால் முதிர்ச்சி வரவேண்டும். பெண்கள் படிப்பை முடிக்க வேண்டும். அதேபோல் வேலை கிடைக்க வேண்டும். பெற்றோர்கள் சம்மதம் வேண்டும். அவர்கள் சம்மதம் இல்லையென்றால், வயது, படிப்பு மற்றும் வேலை இருந்தால் பிரச்சினையில்லை" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x