Published : 27 Mar 2024 03:10 PM
Last Updated : 27 Mar 2024 03:10 PM

தேர்தல் நேரத்தில் மட்டுமே வைகை ஆறு மீது பிரதிநிதிகள் அக்கறை! - மதுரை மக்கள் அதிருப்தி

வைகை ஆற்றை வணங்கி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும், எம்பியுமான சு.வெங்கடேசன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி மற்றும் கூட்டணி கட்சியினர்.

மதுரை: கழிவு நீர் மட்டுமே ஓடும் வைகை ஆற்றை கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திரும்பிப் பார்க்காத மக்கள் பிரதிநிதிகள் தற்போது வைகை ஆற்றை வணங்கி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வைகை ஆற்றை தூர்வாரி தூய்மைப்படுத்துவதுமாக விதவிதமாக வாக்குறுதிகளை கூறிவருவது, மதுரை மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

வைகை ஆற்றை நம்பி, தேனி மாவட்டம் மட்டுமில்லாது திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் கடந்த காலத்தில் பாசன வசதி பெற்றது. தற்போது மழை பெய்தால் மட்டுமே நீரோட்டம் காணப்படுகிறது. வைகை அணையில் தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே தண்ணீர் ஓடுகிறது. வைகை ஆற்றில் நீரோட்டம் இல்லாமல் போனதற்கு மழைப் பொழிவு குறைவு ஒரு காரணமாக கூறப்பட்டாலும் ஆற்றின் வழிநெடுகிலும் நடந்த மணல் கொள்ளை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மணல் முழுவதும் அள்ளப்பட்டுவிட்டதால் இயல்பான நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் தண்ணீர் திறந்துவிட்டாலும், அந்த தண்ணீர் மதுரையை தாண்டுவதே சிரமமாக உள்ளது.

அதனால், வைகை அணை நீர் பங்கீட்டை, தமிழக அரசால் மதுரையைத் தாண்டி மற்ற மாவட்டங்களுக்கு பகிர்ந்து கொடுக்க முடியவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வைகை ஆற்றை சுற்றி மாநில நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி இணைத்து ரூ.380 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ ரோடு போடப்பட்டது. இந்த ரோடு தற்போது வரை முழுமையாக போடப்படவில்லை. அதனால், எந்த நோக்கத்துக்காக இந்த திட்டம் போடப்பட்டதோடு அது நிறைவடையாமல் ஆறு சுருங்கியது தான் மிச்சமாக உள்ளது. மேலும், ஆற்றின் இரு புறங்களிலும் நகர்பகுதியில் காம்பவுண்ட் சுவர் கட்டியதால் நகர்புறங்களில் பெய்யும் மழைநீர், ஆற்றில் இயல்பாக வருவது தடைபட்டுள்ளது.

ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த சாலை போடப்படவில்லை. மாறாக ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்து ரோடு போடப்பட்டுள்ளது. ஆற்றின் வழிநெடுகிலும் அரசு ராஜாஜி மருத்துவமனை, மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் கழிவுநீரை திறந்துவிடுகின்றன. அதனால், ஆற்றில் தற்போது கழிவு நீர் மட்டுமே சிறு ஓடைபோல் ஓடுகிறது. கழிவு நீர் ஓடுவதால் இயல்பாக ஆற்றில் ஆகாயதாமரைச் செடிகள் அதிகளவு பெருகிவிட்டன. இந்த ஆகாய தாமரைச் செடிகள் தான், சித்திரைத் திருவிழா நாட்களில் நடக்கும் உயிர்ப் பலிகளுக்கு முக்கிய காரணம். வைகை ஆற்றை தூய்மைப்படுத்துவதை தட்டிக் கழிப்பதில் பொதுப் பணித்துறையும், மாநகராட்சியும் போட்டிப் போடுகின்றன.

வைகை ஆற்றில் கழிவுநீர் மட்டுமில்லாது சீமை கருவேலம் மரம், ஆகாய தாமரைச் செடிகள், குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் மதுரையின் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் காரணமான வைகை ஆறு மக்கள் பிரதிநிதிகள் எட்டிப் பார்க்காததால் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. மதுரையைச் சேர்ந்த வைகை நதி மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள், வைகை ஆற்றை தூய்மைப்படுத்த பல்வேறு போராட்டங்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

ஆனாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக வைகை ஆறு பக்கம் வராத மக்கள் பிரதிநிதிகள், தற்போது மதுரை மக்களவைத் தொகுதி பிரச்சாரக் களத்தில் வைகை ஆற்றை தூய்மைப் படுத்துவதையும், அதன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதையும் வாக்குறுதிகளாக அள்ளி வீசத் தொடங்கி உள்ளனர்.

இன்று காலை உச்சமாக, மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், வைகை ஆற்றை வணங்கி விட்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார். வைகை ஆற்றை வணங்கி விட்டு பிரச்சாரம் செய்யும் அளவிற்கு வைகை ஆற்றின் தொன்மையையும், அதன் பாரம்பரியத்தையும், எதிர்கால தலைமுறையினருக்கு இந்த ஆறின் தேவையையும், பயனையும் அறிந்த சு.வெங்கடேசன், அவரது இந்த ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில் வைகை ஆற்று ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அதனை தூய்மைப்படுத்தவும், உருப்படியாக என்ன செய்தார் என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உள்ளூர் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் போன்ற அமைச்சர்களும் என்ன முயற்சி செய்தார்கள் என்ற அதிருப்தியும் மக்களிடம் உள்ளது. அதுபோல், அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனும், வைகை ஆற்றை மீட்டெடுப்பதாகவும் உறுதியளித்து பிரச்சாரம் செய்கிறார். திமுக ஆட்சிக்கு முந்தைய 10 ஆண்டு காலம் அதிமுக-தான் ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சிக் காலத்தில், அமைச்சராக இருந்த செல்லூர் கே.ராஜூ, வைகை ஆற்றில் ‘ஸ்மார்ட் சிட்டி’ முடிந்த பிறகு மதுரை சிட்டினியாக மாறும், லண்டனாக மாறும் எனப் பேசினார்.

ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் வைகை ஆறு பாழானதுதான் மிச்சம். அதுபோல் பாஜக வேட்பாளர் சீனிவாசனும் தன் பங்கிற்கு, வைகை ஆற்றை தூர்வாருவேன், மணல் கொள்ளையை தடுப்பேன் எனக் கூறத் தொடங்கியுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் சத்தியாதேவி அடுத்து என்ன சொல்லப் போகிறார் எனத் தெரியவில்லை. இப்படி தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் கட்சியினர், மக்கள் பிரநிதிகள் பார்வை, வெறும் வாக்கு வங்கிக்காக வைகை ஆறு பக்கம் திரும்புகிறது, தேர்தல் முடிந்ததும், வைகை ஆறு பக்கமே எட்டிப்பார்ப்பது இல்லை என்று மதுரை மக்கள் ஆதங்கமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x