Published : 02 May 2024 08:19 AM
Last Updated : 02 May 2024 08:19 AM

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக செயற்கை ஆடுகளங்கள்

நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம்

நியூயார்க்: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்காவில் நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா ஆகிய 3 மாகாணங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்காக நியூயார்க் நகரின் மன்ஹாட்டனுக்கு கிழக்கே நசாவ் கவுண்டியில் உள்ள ஐசனோவர் பூங்காவில் சுமார் 34 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கும் வகையில் நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் மட்டும் லீக் சுற்றின் 8 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் முக்கியமான ஆட்டமாக ஜூன் 9-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி அமைந்துள்ளது. மைதானத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. இந்த மைதானத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதற்காக ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஒவல் மைதான ஆடுகள வடிவமைப்பாளரான டாமியன் ஹோக் தலைமையிலான குழுவினர் 10 செயற்கை ஆடுகளங்களை புளோரிடா நகரில் வைத்து தயார் செய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த பணிகள் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து 10 செயற்கை ஆடுகளங்களும் புளோரிடா நகரில் இருந்து போட்டி நடைபெறும் நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த ஆடுகளங்கள் தஹோமா 31 பெர்முடா புற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியான பராமரிப்புக்கு பின்னர் தற்போது மைதானத்தில் நிறுவப்பட உள்ளது. 10 ஆடுகளங்களில் போட்டிக்கு நான்கு ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மீதம் உள்ள 6 ஆடுகளங்கள் மைதானத்தின் அருகே பயிற்சிக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, கனடா, அயர்லாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் மோதும் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஜூன் 3-ம் தேதி இங்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x