Last Updated : 26 Feb, 2024 02:36 PM

 

Published : 26 Feb 2024 02:36 PM
Last Updated : 26 Feb 2024 02:36 PM

“தமிழிசை, நிர்மலா சீதாராமனை புதுச்சேரி வாக்காளர்கள் ஏற்க மாட்டார்கள்” - நாராயணசாமி கருத்து

நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: “புதுச்சேரி மக்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை ஏற்க மாட்டார்கள். தமிழிசை, நிர்மலா சீதாராமனுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தை சரி செய்ய வேண்டும். காரைக்காலில் சிறப்பு நிபுணர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் ஜிப்மர் திறந்தால் மட்டும் போதாது; தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். ஜிப்மருக்கு காங்கிரஸ் ஆட்சியில்தான் அடிக்கல் நாட்டப்பட்டது.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் மேரி கட்டிடம், கடற்கரையில் பல் நோக்கு அரங்கம், காமராஜர் மணிமண்டபம் முழுமையாக பயன்படுத்தவில்லை. மேரி கட்டிடம் பிரதமரால் திறக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. கடற்கரை பல்நோக்கு அரங்கம் 2 ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகையை மாற்ற வேண்டிய அவசியமில்லை. காமராஜர் மணி மண்டபம் அரசு விழாக்கள் நடத்த மட்டுமே பயன்படுத்துகிறது. நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை.

புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டும் விவகாரத்தில் ஆளுநர் தமிழிசை - பேரவைத் தலைவர் செல்வம் இடையே பனிப் போர் நடக்கிறது. பேரவைத் தலைவர் எந்த உள்நோக்கத்தோடு ரூ.620 கோடியில் சட்டப்பேரவை கட்ட நினைக்கிறார் என கேள்வி எழுகிறது. இதற்கு முதல்வர், அமைச்சர்கள் உடந்தையாக உள்ளனர். ஆளுநரிடம் உள்ள கோப்பு பரிமாற்றம் பற்றி பேரவைத் தலைவர் வெளியே பேசுவதே தவறு. இந்த ஆட்சியில் ஆளுநர், முதல்வர், பேரவைத் தலைவர், அமைச்சர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. இவர்களால் சட்டமன்றம் கட்ட முடியாது. இதற்கு மத்திய அரசு நிதி கொடுக்காது.

இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதுச்சேரி காங்கிரஸுக்கு ஒதுக்க கோரிக்கை வைத்து வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவுக்கு தொகுதியை தாரை வார்த்துள்ளது. 3 நியமன எம்எல்ஏ, மாநிலங்களவை பதவியை பாஜக பறித்துக்கொண்டது. ரங்கசாமி தன் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள, ஆட்சியின் ஊழல்களை மத்திய பாஜக ஆட்சி கண்டுகொள்ளாமல் இருக்க பதவிகளை பாஜகவுக்கு கொடுத்து வருகிறார்.

பாஜகவோ வேட்பாளர்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. புதுச்சேரி மக்கள் மண்ணின் மைந்தர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். வேட்பாளரே இல்லாமல் பாஜக நாடாளுமன்ற தேர்தலில் நிற்க பிரச்சாரம் செய்து வருகிறது. மக்கள் இதை பார்த்து வருகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக சார்பில் எந்த வேட்பாளர் நின்றாலும் இந்தியா கூட்டணி வேட்பாளர் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்.

விஜயதரணி கட்சி மாறியது பற்றி கேட்கிறீர்கள். அரசியல் கட்சியிலிருந்து செல்வது சகஜம். எனினும், தமிழக அரசியலில் தலையிட மாட்டேன். தேர்தலுக்கு முன்பாக புதுச்சேரி அரசு ஊழல் பட்டியல் தொடர்பாக புகார் தருவேன். காங்கிரஸில் ஒரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும். நாங்கள் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிட வேண்டும் என கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

புதுச்சேரி மக்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை ஏற்க மாட்டார்கள். தமிழிசை, நிர்மலா சீதாராமனுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்” என்றார்.

அப்படியென்றால் ராகுல் காந்தி, புதுச்சேரி தொகுதியில் போட்டியிட முன்வந்தால் எதிர்ப்பீர்களா என கேட்டபோது, “அவர் அகில இந்திய தலைவர், எங்கள் கட்சியின் தலைவர். அவர் போட்டியிடுவதை நாங்கள் எதிர்க்க முடியுமா?” என்று நாராயணசாமி பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x