Published : 26 Feb 2024 01:36 PM
Last Updated : 26 Feb 2024 01:36 PM

“ஜி.கே.வாசனை மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது” - செல்வப்பெருந்தகை சாடல்

செல்வப்பெருந்தகை

சென்னை: "தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரஸில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர் எடுத்த முடிவின் காரணமாக ஜி.கே. மூப்பனாரின் ஆத்மா இவரை மன்னிக்காது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜக கூட்டணியில் சேருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பாஜகவுடன் கூட்டணி வைக்க முன் வராத நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக பாஜகவுடன் இணைந்திருக்கிறது. தமிழக மக்களால் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வருகிற பாஜகவுடன் தமாகா கூட்டு சேர்ந்திருக்கிறது.

மறைந்த ஜி.கே. மூப்பனார் காங்கிரசை விட்டு வெளியேறி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி முதல் தேர்தலில் 1996ல் திமுகவுடன் கூட்டணி அமைத்து 20 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றவுடன் தலைநகர் டெல்லிக்கு தமாகாவில் வெற்றி பெற்ற 20 மக்களவை உறுப்பினர்களை தம்முடன் அழைத்துச் சென்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துகளை பெற்றார்.

ஏப்ரல் 1999ல் அன்று பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அன்று தமிழ் மாநில காங்கிரஸில் ப. சிதம்பரம் உள்ளிட்ட மூன்று பேர் மக்களவை உறுப்பினர்களாக இருந்தார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த மறைந்த ஜி.கே. மூப்பனாரை அழைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அந்த கோரிக்கையை ஏற்று தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த மூன்று மக்களவை உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று வகுப்புவாத பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு காரணமாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிராக இன்று அவரது மகன் ஜி.கே. வாசன் வகுப்புவாத பாஜகவில் அரசியல் சுயநலத்தோடு கொள்கையை துறந்து கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் இயக்கத்தில் மூப்பனார் மகன் என்ற ஒரே காரணத்திற்காக 11 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கேபினட் அந்தஸ்துள்ள கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல பதவிகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வழங்கியிருக்கிறார். இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த முடிவின் காரணமாக மூப்பனாரின் ஆத்மா ஜி.கே.வாசனை மன்னிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x