Published : 21 Feb 2024 12:11 PM
Last Updated : 21 Feb 2024 12:11 PM

ஒரே அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்த 6 ‘எய்ம்ஸ்’கள் அடுத்தடுத்து திறப்பு - மதுரை..?

மதுரை: மத்திய அமைச்சரவையின் ஒரே யொரு கூட்டத்தில் முடிவெடுத்த 6 ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளை நேற்று முதல் அடுத்த நாட்களில் பிரதமர் மோடி திறந்து வைக்கும் நிலையில் அவரால் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் கட்டுமானப்பணியே தொடங்கா தது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி நாடு முழு வதும் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டிய 6 ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார். நேற்று ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார். தொடர்ந்து ராஜ்கோட், மங் களகிரி, பதிண்டா, ரேபரேலி மற்றும் கல்யாணி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 5 ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளையும் திறந்து வைக்க இருக்கிறார்.

ஆனால், தமிழ்நாட்டில் மதுரையில் அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை இன்னும் கட்டுமானப் பணியே தொடங்கப் படவில்லை. கடந்த மக்களவைத் தேர்த லுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி, அதாவது 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார்.

தற்போது அடுத்த மக்களவைத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் தற்போது வரை கட்டுமானப் பணியே தொடங்கப்படவில்லை. தமிழக பாஜக தலைவர் அண் ணாமலை, ‘‘மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிலத்தை கொடுக்க 5 ஆண்டுகள் ஆனது. அதற்குள் கரோனா வந்தது. இப்படி திராவிட ஆட்சிக் காலத்தில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்டத்துக்கு ஒத்துழைக்காதது, ‘கரோனா’ போன்ற இயற்கை பேரிடராலே தாமதமானது,’’ என் றார்.

ஆனால், மதுரை ‘எம்பி’ சு.வெங்கடசேன் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘எங்கள் எம்ம்ஸ் எங்கே’ என்று கேள்வி எழுப்பி, அடுத்தடுத்த 6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் திறந்து வைக்கிறார் பிரதமர். ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் மதுரையைத் தவிர முடிவெடுக் கப்பட்ட அனைத்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளும் திறக்கப் படுகின்றன. தமிழ்நாட்டுக்கு நீங்கள் தருவது தப்புத்தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா?’’ என்று கேள்வி எழுப்பி யுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: மத்திய பாஜக அரசு திட்டமிட்டே தமிழகத்தை வஞ்சிக் கிறது. அவர்கள் நினைத்தால் ( மத்திய அரசு ) மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்க முடிகிறது. ஆனால், மதுரைக்கு மட்டும் நேரடியாக நிதி ஒதுக்காமல் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கேட்டுள்ளனர். மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனையின் திட்ட மதிப்பீடு ரூ.1977.8 கோடி. இதில் மத்திய அரசின் பங்களிப்பு நிதி ரூ.350 கோடி. இந்த நிதியைக்கூட இன்னும் மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது.

மதுரைக்கு முன் அறிவித்த, இதனுடன் சேர்ந்து ஒப்புதல் வழங்கப்பட்ட நாட்டின் மற்ற ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்கப்படு கின்றன. ஆனால், மதுரையில் கட்டுமானப் பணி கூட தொடங்கப் படவில்லை என்பது மத்திய அரசின் ஓரவஞ்சனை தான். ஜைக்கா நிறுவனம், தவணை அடிப்படையில்தான் நிதியை ஒதுக்கும். அந்நிறுவனம் இதற்கு மேல் கடன் வழங்குவதை தள்ளிப் போட முடியாது. அதனால், மார்ச்சுக்குள் ஒப்பந்தம் விட்டு பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது.

ஆனால், மத்திய அரசின் பங்களிப்பு நிதியான ரூ.350 கோடியை விடுவித்தால் உடனடி யாக மக்களவைத் தேர்தலுக்கு முன் பணிகளைத் தொடங்கிவிடலாம். ஆனால், அந்த மனசுகூட மத்திய அரசுக்கு இல்லை என்பதுதான் வேதனையாக உள்ளது’’ என்றார். நாடு முழுவதும் 6 எய்ம்ஸ்கள் கட்டப்பட்டு அடுத்தடுத்து திறக்கப்படும் நிலையில் மதுரையில் கட்டுமானப்பணிகள் தொடங்கப் படாதது தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை எய்ம்ஸ் குறித்து ஆர்டிஐ ஆர்வலர் பாண்டிய ராஜா கூறுகையில், ‘‘மதுரை எய்ம்ஸ் சம்பந்தமாக ஆர்டிஐ யில் எப்படி கேள்வி கேட்டாலும் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு இதுவரை பதிலே இல்லை. ஆனால் 2026-ல் முடிந்து விடும் என்ற பதில் மட்டுமே இதுவரைக்கும் கிடைத்து உள்ளது. எம்பிக்கள் கேள்வி கேட்டாலும் இதே நிலைதான் உள்ளது.

ஆர்டிஐ - கேள்விக்கு சரியான பதில் இல்லை: மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்குவது தொடர்பாக விளக்கங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் பொது மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் விலகும். தற்போது இருக்கும் நிலைமையைப் பார்க்கும் போது மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் மேலும் தாமதமாவதற்கான வாய்ப்புகள் அதிகம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x