Published : 21 Feb 2024 05:42 AM
Last Updated : 21 Feb 2024 05:42 AM

தூத்துக்குடியில் விண்வெளி பூங்கா: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில், தூத்துக்குடியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்பதின் பலனாய் கிடைத்தாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குநரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை எழுதிய ‘இந்தியா 75’ புத்தகத்தில், ‘தமிழகத்தில் விண்வெளிப்பூங்கா’ என்ற தலைப்பில் ‘‘தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பம் 2030-ன் தொடர் முயற்சியில் அந்த உச்சக்கட்ட அறிவியல் தொழில்நுட்பத்தையும் இணைக்க முடிந்தால், இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில்கூட தமிழகம் ஒரு முன்னணி இடத்தைப் பெற்று சிறக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளத்துடன், அதன் அருகிலேயே சிறிய அளவிலான செயற்கைக் கோள்களையும் உருவாக்கும் நிலையத்தையும் ஏற்படுத்தினால், குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த நம்மால் முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான விண்வெளித் தளத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ நிறுவனம் தற்போது உருவாக்கி வருகிறது.

உந்து சக்தி பூங்கா: இதையொட்டிய பகுதிகளில் விண்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2 ஆயிரம் ஏக்கரில் ஒரு விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வரவேற்பு அளித்துள்ள விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: இந்த முன்முயற்சியைக் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். நம் தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளத்தையும், அதற்கு அருகிலேயே சிக்கனமான சிறிய ஏவுகலன்கள், செயற்கைக் கோள்களை உருவாக்கும் ஒரு நிலையத்தையும் உருவாக்கினால், உலகிலேயே மிகக் குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் வாய்ப்பை நம்மால் பெற முடியும்.

இவ்வாறு ஏவுகலன்களுக்கான உதிரி பாகங்கள், எரிபொருள்களை உருவாக்கும் நிலையங்களினால் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படும். நமது தமிழ் மண்ணுக்குப் பெரும் வருவாயையும் கொண்டுவர முடியும். அந்தவகையில் தமிழகபட்ஜெட்டில் தூத்துக்குடியில் 2 ஆயிரம் ஏக்கரில் அறிவிக்கப்பட்டுள்ள விண்வெளி பூங்கா, ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்பதன் பலனாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x