Published : 19 Feb 2024 07:36 AM
Last Updated : 19 Feb 2024 07:36 AM

காங்கிரஸில் நிலவும் அதிருப்தி, உட்கட்சி பகை: சவால்களை எதிர்கொள்வாரா செல்வப்பெருந்தகை?

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் தொடர்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு நிர்வாகிகள் டெல்லிக்கு படையெடுத்து, அங்கேயே முகாமிட்டு வந்தனர். ஒருவழியாக கே.எஸ்.அழகிரியை மாற்றி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ.வுமான கு.செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கட்சி நிர்வாகி ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், பெரியாரும், காமராஜரும் அமர்ந்த இருக்கையில் செல்வப்பெருந்தகை அமர இருப்பதை சுட்டிக்காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்பதவி அவருக்கு எளிதில் கிடைக்கவில்லை. ப.சிதம்பரம் போன்ற ஜாம்பவான்கள், தங்கள் அரசியல் செல்வாக்கால் தங்கள் மகன்களுக்கு பெற நினைத்த பதவியை, தன் சொந்த அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் தொடர் முயற்சி மற்றும் போராட்டத்தால் செல்வப்பெருந்தகை பெற்றிருப்பது கட்சியினர் அனைவரின் புருவத்தையும் உயர்த்தி இருக்கிறது.

கக்கன் (1952), இளையபெருமாள் (1979) ஆகியோருக்கு அடுத்தபடியாக, 45 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலினத்தை சேர்ந்த செல்வப்பெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அடுத்த சில தினங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில், ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உடனடியாக இவர் தேர்தல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கு குறையாமல் பெற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அரசியல் சூழல் மாறியுள்ளது. தேசியத் தலைவர் ஒருபுறம் அரசியல் பணியாற்றி வருகிறார். மறுபுறம் ராகுல் காந்தி நடைபயணம் சென்று்கொண்டிருக்கிறார். இந்த தேர்தலில் தேசிய அளவில் இண்டியா கூட்டணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் கூட்டணியில் உள்ள கட்சிகள், தனித்தே போட்டியிட விரும்புகின்றன. ராமர் கோயில் திறக்கப்பட்டிருப்பதை பாஜக பெரும் பலமாக கருதுகிறது. கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜக தமிழகத்தில் வலிமை பெற்றுள்ளது. இதை எல்லாம் எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் இந்த தேர்தலில் அரசியல் வியூகங்களை அமைப்பதும் பெரும் சவாலாக இருக்கும்.

மேலும் உட்கட்சி பகைமையை முடிவுக்கு கொண்டு வந்து, கட்சியை ஒற்றுமையாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் செல்வப்பெருந்தகையிடம் வந்து சேர்ந்துள்ளது. இதில் வெல்வதை பொருத்தே, இவரது தலைமைப்பண்பு மதிப்பிடப்படும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

பல கட்சிகள் மாறி காங்கிரஸுக்கு வந்த செல்வப்பெருந்தகைக்கு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக்கி, மாநில காங்கிரஸ் தலைவராகவும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்திருப்பது வருத்தம் அளிப்பதாக கூறி, கட்சிக்குள் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் விரும்பும் தலைவராக செல்வப்பெருந்தகை மாறுவதுதான், அவர் முன் இருக்கும் மிகப்பெரும் சவால்.

மேலும் கட்சியில் வாரிசுகளுக்கே தொடர்ந்து வாய்ப்பு வழங்குவதாகவும், பணம் படைத்தவர்களுக்கே பதவிகள் கிடைப்பதாகவும், கட்சியில் நீண்ட நாட்களாக உழைப்பவர்களுக்கு எந்த பதவியும் கிடைப்பதில்லை எனவும் நீண்ட நாட்களாகவே கட்சிக்குள் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண்பதும் செல்வப்பெருந்தகைக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் கூறிய செல்வப்பெருந்தகை, “கட்சியில் அணி என்பது, அக்கட்சியை பிடித்திருக்கும் பிணி. அதை ஒழிப்போம். அரசியல் என்பது ஒரு கூட்டு முயற்சி. அனுபவம் வாய்ந்த தலைவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். அவர்களுடன் ஆலோசித்து கட்சியை வளர்க்கவும், வலிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x