Published : 18 Feb 2024 07:41 PM
Last Updated : 18 Feb 2024 07:41 PM

3 ஆண்டுகளுக்குள் 60,567 நபர்களுக்கு பணி நியமனம்: முதல்வர் பேச்சு; தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 60,567 நபர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “சென்னையில் 16.02.2024 அன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டில் இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மாதம் வரை 60,567 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விவரத்தை முதல்வர் குறிப்பிட்டார். இது குறித்து சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு பின்வரும் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நாட்டில், அரசுப் பணிக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்காக உள்ள தேர்வு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம், கடந்த இரண்டரை ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்காக, ஜனவரி 2024 வரை, 27,858 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, ஜனவரி 2024 வரை 32,709 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

துறைவாரியான நியமனங்களைப் பொறுத்தவரை நீதித்துறையில் 5,981 பணியிடங்களும், பள்ளிக்கல்வித்துறையில் 1,847 பணியிடங்களும், வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்களும், சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வுத் துறையில் 4,286 பணியிடங்களும், ஊரக வளர்ச்சித் துறையில் 857 பணியிடங்களும், உயர் கல்வித் துறையில் 1,300 பணியிடங்களும், காவல்துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூக நலம் மற்றும் சத்துணவு போன்ற அரசின் பிற துறைகளின் வாயிலாக 15,442 பணியிடங்களும் அந்தந்தத் துறைகளின் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டன. இவ்வகையில் 32,709 இளைஞர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆக மொத்தம், இந்த அரசு பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டு காலத்திற்குள் (27,858 + 32,709) 60,567 நபர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்பினை உருவாக்கிட உலக முதலீட்டாளர்களும் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக நம் மாநிலத்தின் இளைஞர்களுக்கு இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட தமிழ் நாடு அரசு வழிவகை செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 24,879 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததை விட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் அரசுத் தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x