Published : 11 Feb 2024 06:50 AM
Last Updated : 11 Feb 2024 06:50 AM

வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம்: சர்வதேச கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற `விளையாட்டில் மறுமலர்ச்சி' என்ற தலைப்பிலான சர்வதேசக் கருத்தரங்கின் நிறைவு விழாவில் பேசினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

திருச்சி: விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

திருச்சி தேசியக் கல்லூரியில் `விளையாட்டில் மறுமலர்ச்சி' என்ற தலைப்பிலான சர்வதேசக் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி செயலாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் குமார்வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி பேசியதாவது:

விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. கீழ்நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வெல்லும்போது, அவர்களுக்கு கோடிக்கணக்கில் ரொக்க விருதுகளை வழங்குவதில் மாநில அரசுகள் போட்டியிடுகின்றன. அதேபோல, விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

வீரர்கள் நாட்டின் சொத்து: தற்போது, இந்தியா பதக்கங்கள் பெறுவதில் முன்னேறி வருகிறது. சமீபத்திய சர்வதேச நிகழ்வுகளில், இந்திய வீரர்கள் பல பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். எனவே, விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்துகள். விளையாட்டு நமது பெருமை மட்டுமல்ல, தேச நலனுக்கும் உகந்தது.

‘பிட் இந்தியா’ திட்டம் நாட்டின் விளையாட்டுத் துறைக்கு சக்தி வாய்ந்த கருவியாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள திறமைசாலிகளைக் கண்டறிந்து, அவர்களைவளர்க்க வேண்டும்.

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்துகொண்டு, ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

இந்த நிகழ்வில், ஒலிம்பியன் பாஸ்கரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்க தீர்மான அறிக்கையை வாசித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x