Published : 10 Feb 2024 08:30 PM
Last Updated : 10 Feb 2024 08:30 PM

“செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ் மொழி...” - முதல்வர் ஸ்டாலின் @ கணித்தமிழ் மாநாடு

சென்னை: “செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழக அரசுதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். குறுஞ்செய்தி முதல் அனைத்து தொடர்புகளையும் முடிந்த வரை தமிழில் கையாண்டால் தலைமுறைகள் தாண்டியும் தமிழ் வாழும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ்மொழியை வெற்றிகரமாகப் பயணிக்க வைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பன்னாட்டு கணித்தமிழ் மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்தார். அதில், “ஓலைச்சுவடிக் காலத்திலிருந்து இன்றைய ஆண்ட்ராய்டு காலம் வரையிலும் அனைத்திலும் கோலோச்சி வரும் மொழியாக நமது அன்னைத் தமிழ் மொழி இருப்பது நமக்கெல்லாம் பெருமை. முன்னைப் பழமைக்கும் பழமையாய் - பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் நம் தமிழ்மொழி இருப்பதைவிட நமக்கு வேறு பெருமை வேண்டுமா?

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தமிழ்மொழியின் நிலையைக் குறித்து ஆராயவும் விவாதிக்கவும், புதிய சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளவும், இளம் திறமையாளர்களை அடையாளம் காணவும், ‘பன்னாட்டு கணித்தமிழ் - 24’ என்கிற மாநாடு தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் பிப்ரவரி 8,9,10 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய தமிழை, கணினிக் காலத்தில் மட்டுமல்ல, அடுத்து வரும் எந்தக் காலத்துக்கும் நிலைநிறுத்தும் முயற்சியே இந்த மாநாடு ஆகும். பழம்பெருமை பேசிக் கொண்டு மட்டுமே இருப்பவர்கள் அல்ல நாம்; பழம்பெருமையைத் தக்க வைத்துக் கொள்ளவும் எந்நாளும் சிந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் நாம்.

இணையப் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதில் மாநிலவாரியாகப் பார்த்தால் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஐஏஎம்ஏஐ என்ற தொலைத்தொடர்பு ஆய்வகத்தின் அறிக்கை கூறுகிறது. பன்னாட்டுக் கணித்தமிழ் - 24 என்ற இந்த மாநாடு, ‘தமிழ் நெட் - 99’ என்ற மாநாட்டை நடத்திய கருணாநிதியின் நூற்றாண்டில் நடைபெறுவது மிகமிகச் சிறப்பானதாகும்.

  • திமுக ஆட்சியில், 1997-ஆம் ஆண்டே தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதன்முதலில் தமிழகத்துக்கு வகுத்துக் கொடுத்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.
  • அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற, ஏழை - எளிய மாணவர்கள் கணினி எனும் இயந்திரத்தையே நேரில் பார்த்திராத காலகட்டத்தில், அவர்களுக்குக் கணினிக்கல்வி தந்தார்.
  • 1999-2000-ஆம் ஆண்டே, பள்ளிப் பாடத்திட்டத்தில் மட்டுமின்றி, கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட கல்வி பாடத்திட்டங்களிலும் கணினிப் பாடத்தை அவர் கொண்டுவந்தார்.
  • 1996-2001 ஆட்சிக் காலத்திலேயே ‘Empower IT’ என்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி, தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தைப் பட்டிதொட்டிகள் எல்லாம் கருணாநிதி கொண்டு சென்றார்.
  • அப்போதே Mobile Governance, e-Governance போன்றவை அரசு அலுவலகங்களில் - அரசு சேவைகளில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
  • தமிழ்நாட்டில் IT Professionals ஏராளமாக உருவாகக் காரணமாக இருந்தார்.
  • தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேடி வந்து தேர்வு செய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை மாற்றிக் காட்டினார்.
  • தகவல் தொழில்நுட்பத்துக்கு எனத் தனித் துறையையும் 1998-ஆம் ஆண்டிலேயே உருவாக்கி, அதற்குத் தனி அமைச்சரையும் நியமித்தார்.
  • கணினி என்ற பெயர் தமிழக மக்கள் எல்லோரையும் சென்றடைவதற்கு முன்னதாகவே, டைடல் பூங்காவைத் தமிழகத்தில் அமைத்தவர் கருணாநிதி. 1997-இல் தரமணியில் டைடல் பூங்காவை உருவாக்கிட அதற்கெனப் புதுக் கொள்கையினை உருவாக்கி, ஆசியாவிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டடமாக அதனைக் கட்டி, 2000-ஆம் ஆண்டில் அதனைத் திறந்து வைத்து, தமிழகத்துக்கே பெருமை சேர்த்தார் அவர். மற்ற மாநிலங்களை விடத் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் முன்னேறி இருக்கக் காரணம் கருணாநிதி என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.

1996-ஆம் ஆண்டு முதல்வராக கருணாநிதி இருந்தபோது தொடங்கிய தகவல் தொழில்நுட்பப் புரட்சிதான் கடந்த 30 ஆண்டுகள் அத்துறை மகத்தான வளர்ச்சியைப் பெறுவதற்குக் காரணமாகும். உலகம் முழுக்க தமிழக இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் அதற்கு கருணாநிதி அடித்தளம் அமைத்தார்.

1999-ஆம் ஆண்டு Tamilnet-99 என்ற மாநாட்டின் மூலமாகத்தான் ‘தமிழ் 99 விசைப்பலகை’ உருவாக்கப்பட்டது. தமிழக அரசால் அது அங்கீகரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. இன்றைக்கு அனைத்து தொழில் நுட்ப வடிவங்களிலும் தமிழைப் பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கு விதை போட்டவர் கருணாநிதி. அதன் பின் 5.7.2000 அன்று தமிழ் இணையக் கல்விக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

திமுக அரசின், தொலைநோக்குப் பார்வைக்கு எடுத்துக்காட்டு, கணினித் துறையை கருணாநிதி கையாண்ட விதம். அதே வழியில்தான் எனது தலைமையிலான அரசும் செயல்பட்டு வருகிறது. பன்னாட்டுக் கணித்தமிழ் -24 என்ற மாநாட்டையும் இதே தொலைநோக்குப் பார்வையுடன்தான் நடத்துகிறோம். ஆங்கிலத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுவரும் Natural Language Processing Tools (NLPT), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திரவழிக் கற்றல் (Machine Learning), Machine Translation (MT), Sentimental Analysis (SA), Large Language Model (LLM), Automatic Speech Recognition (ASR) போன்றவற்றைத் தமிழில் உருவாக்கும் முயற்சியாக இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.

ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. தொழில்நுட்பத்தில் மொழியின் முக்கியத்துவம் அதிகரித்தும் வருகிறது. எந்த விதமான தொழில்நுட்பம் வந்தாலும் அவை அனைத்திலும் தமிழ் வாழ வேண்டும், ஆள வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும். மொழி வாழ்ந்தால் இனம் வாழும். மொழி தாழ்ந்தால் இனம் தாழும். ‘தமிழை வளர்த்து தமிழனை உயர்த்துவோம்’ என்பதுதான் எமது அரசின் நோக்கம்.

எப்போது தோன்றியது என்று கண்டறியப்பட முடியாத தமிழ்மொழியை, எப்போதும் சிறப்புற வைக்க இந்தப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 24 அடித்தளம் அமைக்கும் என்பதில் துளியளவும் அய்யமில்லை. செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழக அரசுதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் மொழிக்காக முன்னெடுக்காத பெருந்திட்டம் இந்த மாநாடு. மொழி காக்க உயிரையே கொடுத்தவர்கள் தமிழர்கள் என்பதும் நமது வரலாறுதான்.

செயற்கை நுண்ணறிவு (AI), அதிகளவில் மொழி மாதிரிகளை உருவாக்குதல் (LLM), டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பம், மின் ஆளுமை ஆகிய தளங்களில் இம்மாநாடு நடைபெற்றுள்ளது. 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்க் கணினிப் பன்னாட்டு மாநாடு நடைபெறும் என்பதை அறிவித்தோம். 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கடந்த அக்டோபர் மாதம் நான் அறிவிப்பை வெளியிட்டேன்.

பத்து நாடுகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் வருகை தந்துள்ளார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. நாற்பது காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட அமர்வுகள் நடைபெறுகின்றன. இவை அனைத்தும் தமிழுக்காக நடைபெறுகின்றன என்பதே சிறப்பு. செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், இயற்கைமொழிச் செயலாக்கம், நவீன மொழித் தொழில்நுட்பங்கள் ஆகிய பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் நடந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆற்றிவரும் தொண்டு என்பது எதிர்காலத் தமிழ்த் தொண்டாகும். இதற்குக் காரணமான தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனைப் பாராட்டுகிறேன். வருங்காலத் தமிழகத்தில் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்க இருப்பதோடு, பல்லாயிரம் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கும் அடிப்படையாய் விளங்கும் இத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே ஆக்கப்பூர்வமான பணிகளை அவர் ஆற்றி வருகிறார்.

உலகளவிலான தம்முடைய அனுபவங்களால் இத்துறையின் வளர்ச்சிக்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள், நடத்தி வரும் மாநாடுகள் அவர் செயல்திறனைப் பறைசாற்றுகின்றன. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தலைவராகவும், அரசின் முதன்மைச் செயலாளராகவும் இருக்கும் உதயச்சந்திரனுக்கு இம்மாநாட்டின் ஒருங்கிணைப்புக்காக எனது பாராட்டுகள். தமிழ்நாடு அரசின் அழைப்பை ஏற்று - உலகம் முழுவதும் இருந்து வருகை தந்துள்ள தகவல் தொழில்நுட்ப அறிஞர்கள், வல்லுநர்கள் அனைவர்க்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ்மொழியை வெற்றிகரமாகப் பயணிக்க வைக்க வேண்டும். தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் தமிழ்மொழி, தகவமைக்கப்பட வேண்டும். ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல தமிழில் தொழில்நுட்பச் சேவைகள் அனைத்தும் கிடைக்கத் தமிழக அரசும் ஆவன செய்யும். உலகளாவிய நிறுவனங்கள் வெளியிடும் மென்பொருட்கள் மற்ற மொழிகளில் வெளியாகி, தமிழுக்குக் காலதாமதமாக வருகிறது. இந்த இடைவெளியை குறைத்தாக வேண்டும். ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு மென்பொருட்கள் வரும்போதே தமிழுக்கும் வந்தாக வேண்டும்.அத்தகைய பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தமிழ்மொழி சார்ந்த வளத்தையும் வழிகாட்டுதல்களையும் தமிழக அரசு வழங்கும்.

இளைய தலைமுறையினர் அனைத்துத் தகவல் தொழில்நுட்பங்களிலும் தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறுஞ்செய்தி முதல் அனைத்து தொடர்புகளையும் முடிந்த வரை தமிழில் கையாண்டால் தலைமுறைகள் தாண்டியும் தமிழ் வாழும். தமிழர்களும், தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளில் வாழ்பவர்களும் இணைய வழியாகத் தமிழ்ப் பாடங்களைப் படிக்க வேண்டும்.

தமிழ் ஆர்வத்தை, தமிழ் அறிவாக அனைவரும் மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், தமிழ்மொழி கற்பிப்பு, ஆய்வுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தொல்லியலையும் தொழில்நுட்பத்தையும் ஒருசேரப் பற்றி நிற்போம். துறைதோறும் தமிழ்த் தொண்டு ஆற்றுவோம். தமிழைப் புத்தொளி பெற வைப்போம்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x