Published : 08 Feb 2024 04:11 AM
Last Updated : 08 Feb 2024 04:11 AM
ஓசூர்/தஞ்சாவூர்: வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவில் இணைந்தது குறித்து கேட்கிறீர்கள். அநேகமாக அவர்கள் கட்சியில் செயல்படாதவர்களாகத்தான் இருந்திருப்பர். தமிழகத்தில் அதிமுகதான் மிகப் பெரிய கட்சி. ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில், இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட, மாபெரும் இயக்கமான அதிமுக தலைமையில்தான் மெகா கூட்டணி அமையும். அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வரும் கட்சிகளை சேர்த்துக் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கதவு மூடப்பட்டுவிட்டது! - அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம்தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. இதில், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா, எம்ஜிஆர்,ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தும் செயலை, எந்தக் கட்சி செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பாஜக கூட்டணி தேவையில்லை என்பது தொண்டர்களின் கருத்து.கூட்டணி தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா, அவரது கருத்தைக் கூறலாம். எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதுதான் எங்களது நிலைப்பாடு. பாஜகவைப் பொறுத்தவரை, எங்களது கூட்டணிக் கதவு மூடப்பட்டுவிட்டது.
விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஓபிஎஸ் பேசுவதை எல்லாம்,பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர் பாஜகவின் கொத்தடிமையாக இருந்தவர். இபிஎஸ் தலைமையில் அதிமுக எழுச்சியுடன் இருப்பதை அவரால் ஏற்க முடியவில்லை. எந்தக் கொம்பனாலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கமுடியாது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்குச் சென்று, ரூ.3 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டதாக கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தங்களை யாருடன் மேற்கொண்டனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தட்டேந்தி பிச்சை கேட்கும் நிலையைத்தான் திமுக அரசு உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT