Published : 07 Feb 2024 09:43 PM
Last Updated : 07 Feb 2024 09:43 PM

“நேருவை சமூக நீதிக்கு எதிரானவராக கூறுவது நியாயமா?” - பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி சரமாரி கேள்வி

சென்னை: “சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைய தமது வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி உழைத்த நேருவை நாக்கூசாமல் ஆதாரமற்ற அவதூறுகளை பிரதமர் எனும் உயர் பொறுப்பிலிருக்கும் மோடி பேசுவது காழ்ப்புணர்ச்சியைதான் வெளிப்படுத்துகிறது” என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, இடஒதுக்கீட்டுக்கு ஜவஹர்லால் நேரு எதிரானவர், சமூக நீதியில் அவருக்கு அக்கறை இல்லை என்றும், பகைமை உணர்ச்சியோடு அவர் மீது அவதூறு குற்றச்சாட்டை கூறியுள்ளார். ஆத்திரகாரருக்கு புத்தி மட்டு என்று சொல்வார்கள். சமீபகாலமாக மோடி பதற்றத்துடன் பேசுவது வாடிக்கையாகிவிட்டது.

நாடாளுமன்ற கடைசி கூட்டத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடு விடைபெறவேண்டிய நாளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மீது காழ்ப்புணர்ச்சியோடு விஷத்தை கக்குகிற வகையில் மோடி பேசியிருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே களங்கப்படுத்தியிருக்கிறது. இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வதற்கு பிரதமராக 17 ஆண்டுகாலம் பதவி வகித்த பண்டித நேரு, அதன்பின் 15 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஆகிய முதுபெரும் தலைவர்களை கொச்சைப்படுத்துவது எத்தகை அரசியல் நாகரிகமென தெரியவில்லை.

இத்தகைய இழிவான பிரச்சாரத்தினால் பிரதமரின் தரம்தான் குறைந்திருக்கிறதே தவிர, நேரு, இந்திரா ஆகியோருக்கு நாட்டு மக்களிடையே இருக்கின்ற நன்மதிப்பு கடுகளவும் குறையாது. குறிப்பாக, பயங்கரவாதத்திற்கு தன்னை பலியாக்கிக் கொண்ட இந்திரா காந்தியை இழிவுப்படுத்துவதை தேசப்பக்திமிக்க எந்த குடிமகனும் சகித்துக் கொள்ளமாட்டான். பிரதமர் மோடியின் குற்றச்சாட்டி மறுப்பதற்கு தமிழகத்தில் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழகத்தில் நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டு கொள்கைக்கு அரசமைப்பு சட்டம் 1950-ல் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது. தமிழகத்தில் இரு மாணவர்கள் தொடுத்த வழக்கில் இடஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றமும், சென்னை மாகாண காங்கிரஸ் அரசு செய்த மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பினால் ஏற்படுகின்ற பாதிப்பிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பாதுகாப்பதற்காக தந்தை பெரியார் திருச்சியில் கண்டன கூட்டம் நடத்தினார். இதன் தீவிரதன்மையை உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் விரிவாக கூறி இடஒதுக்கீட்டு கொள்கையை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை முற்றிலும் உணர்ந்த பிரதமர் நேரு அரசமைப்பு சட்டத்தை திருத்துவதென முடிவு செய்தார்.

இதையொட்டி மக்களவையில் உரையாற்றும் போது, “சமூகத்தில் பல காலமாக பெருகியிருக்கிற சமத்துவமற்ற நிலையை சரிசெய்ய நாம் ஏதாவது செய்தாக வேண்டும். அவற்றிற்கு ஒரு முடிவு கட்டுவதற்காகவே சமத்துவநெறி பின்பற்றப்படுகிறது. எனவே, கீழே இருப்பவர்களை மேலுயர்த்த முயற்சி செய்யும்போது அரசமைப்பு சட்டம் தடையாக இருக்கிறது. அதனால், அதில் திருத்தம் செய்து சமூகநீதியை உறுதிப்படுத்துவது நமது கடமையாகும்” என அவர் பேசியதை பிரதமர் மோடியால் மறுக்கமுடியுமா? இப்படி பேசிய நேருவை சமூகநீதிக்கு எதிரானவர் என்று கூறுவது நியாயமா?

தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த இடஒதுக்கீட்டு திட்டத்தை பாதுகாப்பதற்காக 2 ஜூன் 1951-ல் அரசமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டு 15வது உறுப்பின் நான்காம் உட்பிரிவு சேர்க்கப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 18-ல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று அமலுக்கு வந்தது. இத்தகைய திருத்தம் செய்தபோது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு இயக்கத்தினர் எவரும் அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராககூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இடஒதுக்கீட்டு திட்டத்தை காக்க முதல் திருத்தம் கொண்டு வர காரணமாக இருந்த பண்டித நேருவையும் காமராஜரையும் திராவிட இயக்கத் தலைவர்களான தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் பாராட்டியது வரலாற்று ஏடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முதல் திருத்தத்தின் மூலவர் என்று காமராஜரை தமிழ்கூறும் நல்லுலகம் போற்றி பாராட்டியது. இதன்மூலம் நீண்டகாலமாக வழக்கத்தில் இருந்துவந்த சமூக பாகுபாடுகளை ஏற்றத்தாழ்வுகளை களைவதன் மூலம், அரசமைப்பு சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டவாறு ஜாதி, மத பேதமற்ற சமூக கட்டமைப்பை தோற்றுவிக்க முடியுமென்று பண்டித நேரு திடமாக நம்பினார்.

சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைய தமது வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி உழைத்த மாமனிதர் நேருவை கொஞ்சம்கூட நாக்கூசாமல் ஆதாரமற்ற அவதூறுகளை பிரதமர் எனும் உயர்பொறுப்பிலிருக்கும் மோடி பேசுவது அவரது அரசியல் தரத்தை காட்டுவதோடு, ஆரோக்கியமான அரசியலுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியைதான் அவரது உரை வெளிப்படுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x