Last Updated : 31 Jan, 2024 04:00 AM

 

Published : 31 Jan 2024 04:00 AM
Last Updated : 31 Jan 2024 04:00 AM

பொது ஒதுக்கீட்டு இடங்களை மாநகராட்சி பெயருக்கு மாற்றம் செய்யும் பணி தீவிரம்: இதுவரை 700 இடங்களுக்கான பெயர்கள் மாற்றம் @ கோவை

கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில், மனைதாரர்களின் பெயர்களில் உள்ள பொது ஒதுக்கீட்டு இடங்களை கண்டறிந்து, மாநகராட்சி ஆணையர் பெயருக்கு மாற்றம் செய்யும் பணியை மாநகராட்சி நகரமைப்புத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வீட்டுமனைகள் பிரிக்கப்படும் போது, அதில் 10 சதவீதம் பரப்பளவிலான இடத்தை, பொது ஒதுக்கீட்டு இடமாக ( ரிசர்வ் - சைட் ) அரசுக்கு மனைதாரர்கள் ஒதுக்க வேண்டும். இந்த பொது ஒதுக்கீட்டு இடத்தில் மாநகராட்சியின் சார்பில் பூங்கா, சமுதாய கூடங்கள் அமைக்கப் படுகின்றன. மாநகராட்சிப் பகுதியில் ஏறத்தாழ 2,500-க்கும் மேற்பட்ட மனைப் பிரிவுகள் உள்ளன. இதன் மூலம் ஏறத்தாழ 1,500-க்கும் அதிகமான எண்ணிக்கையில் பொது ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.

அதாவது, தோராயமாக 900 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்கள் மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ளன. பல்வேறு பொது ஒதுக்கீட்டு இடங்கள் முறையாக எவ்வித பராமரிப்பும் இல்லாமல் உள்ளன. மனைப்பிரிவுகள் பிரிக்கும் போது, பொது ஒதுக்கீட்டு இடங்கள் என அறிவிக்கப்பட்டாலும், அது குறித்த தான பத்திரத்தை உடனடியாக மாநகராட்சியிடம் தொடர்புடைய மனைகளை பிரித்து அனுமதி வாங்குபவர்கள் ஒப்படைப்பதில்லை. இதனால் பல பொது ஒதுக்கீட்டு இடங்கள் இன்னும் தனியார் பெயரில் உள்ளன.

இது குறித்து சமூக செயல்பாட்டாளரும், தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளருமான எஸ்.பி.தியாக ராஜன் கூறும்போது, ‘‘கோவை மாநகராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள பொது ஒதுக்கீட்டு இடங்களை மீட்க நாங்கள் தொடர்ந்து மாநகராட்சியிடம் வலியுறுத்தி வருகிறோம். சமீபத்தில் கூட ஆக்கிரமிப்பில் உள்ள 250 பொது ஒதுக்கீட்டு இடங்களின் விவரங்களை ஆணையரிடம் அளித்து அவற்றை மீட்க வலியுறுத்தியுள்ளோம். தாமதம் செய்யாமல், மண்டலம் வாரியாக குழுக்களை அமைத்து பொது ஒதுக்கீட்டு இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அந்த இடங்களை மீட்க மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இது குறித்து மாநகராட்சி நகரமைப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘ஆக்கிரமிப்பில் உள்ள பொது ஒதுக்கீட்டு இடங்களை கண்டறிந்து, நோட்டீஸ் வழங்கி தொடர்ச்சியாக அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த இரு வருடங்களாக பொது ஒதுக்கீட்டு இடத்தை ஆணையர் பெயருக்கு மாற்றம் செய்த பின்னரே, மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு, இது போன்ற கட்டாய சூழல் இல்லை.

அதுபோன்ற சமயங்களில், பொது ஒதுக்கீட்டு இடங்கள், ஒப்படைக்கப்படாமல் மனைதாரர் களின் பெயர்களிலேயே இருந்துள்ளது. அது போன்று 2,200 எண்ணிக்கையிலான பொது ஒதுக்கீட்டு இடங்களின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், இதுவரை 1,700 இடங்களை மாநகராட்சி ஆணையரின் பெயருக்கு மாற்ற வருவாய்த் துறைக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப் பித்துள்ளோம். இதுவரை 700 இடங்கள் ஆணையரின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப் பிக்கப்பட்டவை, அது போக மீதமுள்ளவையும் விரைவில் ஆணையர் பெயருக்கு மாற்றம் செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x