Published : 23 Jan 2024 08:53 AM
Last Updated : 23 Jan 2024 08:53 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற அயோத்தி ராமர்கோயில் திறப்பு விழா நேரலை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், இந்து மக்களின் உரிமையை பறிக்க திரும்ப, திரும்ப முயற்சி நடந்தாலும் நேர்மையுடன் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோமே தவிர, அமைதியை குலைப்பதற்கான செயலில் ஈடுபட மாட்டோம் என தெரிவித்தார்.
காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயிலில்,பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியை நேரலை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
பின்னர், மத்திய நிதியமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியை, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நேரலையில் பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், எத்தனை முறை கூறியும் தமிழகத்தில் உள்ள திமுக அரசு தன்னுடைய செயல் முறையை மாற்றிக் கொள்ளாமல், நேற்று காலை வரையிலும் நேரலைநிகழ்ச்சிக்கு தொடர்ந்து இடையூறு செய்தனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடையில்லை எனக் கூறியதும், கோயிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதையடுத்து, கோயில்நிர்வாகத்திடம் தெரிவித்து நேரலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்.
இந்து மக்களின் வழிபாட்டு உரிமை மற்றும் எங்களது உரிமையை நிலை நிறுத்திய இரண்டு நீதிமன்றங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
550 ஆண்டுகள் காத்திருந்தோம்: ஐயப்ப பக்தர்கள் எப்படி விரதத்தை கடைபிடித்து சுவாமியை தரிசிக்க செல்கின்றனரோ, அதேபோல் இந்திய நாட்டின் பிரதமர் 11 நாட்கள் சில முறைகளுடன், கட்டுப்பாடுகளை பின்பற்றி நாட்டின் சார்பில் 550 ஆண்டுகளாக காத்திருந்த அயோத்தியில் அழகான பெரிய கோயில் அமைத்து, ராமர் சிலையை பூஜிக்கும் காட்சியை நாம் அனைவரும் கண்டு ரசித்தோம்.
காஞ்சி சங்கர மடத்தின் கீழ் இயங்கும் தனியார் கோயிலான காமாட்சியம்மன் கோயிலும் இடையூறு செய்தனர். போலீஸாரை வைத்து மிரட்டினர். இங்கு அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை. ஆனாலும் தடுத்தனர். சில இடங்களில் நேரலை செய்வதற்கான இயந்திரங்களை தொழிலாளர்களிடம் இருந்து பெற்றுச் சென்றுள்ளனர்.
அதை அவர்களிடம் திரும்ப வழங்க வேண்டும். இதை திரும்ப, திரும்ப பெரிதுபடுத்த வேண்டிய தேவையில்லை. இன்றைய தினம் ஒரு பொன்னான நாள் என்று நீதிமன்றமும் ராமரும் நிரூபித்து விட்டனர். இந்து மக்களின் உரிமையை பறிக்க திரும்ப, திரும்ப முயற்சி நடந்தாலும் நேர்மையுடன் சட்டப்பூர்வமாக செல்வோமே தவிர கல்லெறிந்து, அமைதியை குலைப்பதற்கான செயலில் ஈடுபட மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT