Published : 17 Jan 2024 06:50 AM
Last Updated : 17 Jan 2024 06:50 AM
சென்னை: காணும் பொங்கல் அன்று சென்னையில் இருசக்கர வாகனங்களின் மூலம் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முடியாது என்றும், அவர்களை கண்காணிக்க 3,168 கேமராக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த புத்தாண்டின்போது எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை போக்குவரத்து மாற்றங்களால், விபத்தில்லாத புத்தாண்டாகவும், போக்குவரத்து நெரிசல் குறைந்த புத்தாண்டாகவும் சென்னை மாநகருக்கு புத்தாண்டு அமைந்தது.
அதேபோல இந்த காணும் பொங்கலும் விபத்தில்லாத, போக்குவரத்து நெரிசல் இல்லாத காணும் பொங்கலாக அமைய வேண்டும் என்பதே காவல் துறையின் நோக்கமாகும். காணும் பொங்கலையொட்டி காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை, காவல் துறை அறிவிப்பு செய்த வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.
பிரதான சாலைகளில் நிறுத்தக் கூடாது.மெரினா கடற்கரைக்கும் வருபவர்களுக்கு மட்டுமே இம்முறை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வடசென்னையில் இருந்து மெரினாவுக்கு வரும் வாகனங்கள் கலங்கரை விளக்கம் வரை நேராக செல்லலாம். கலங்கரை விளக்கத்தில் இருந்து போர்நினைவுச் சின்னம் செல்லும் வாகனங்கள், கூட்ட நெரிசலின்போது பெல்ஸ் சாலை, விக்டோரியா சாலைவழியாக திருவல்லிக்கேணிக்கு திருப்பிட விடப்படும். வேறு எங்கும்மாற்றம் செய்யப்படவில்லை.
குறிப்பாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை தடுக்க சென்னை முழுவதும் 3,168 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இருசக்கர வாகன சாகசங்கள் மற்றும் பந்தயங்களில் ஈடுபடுவோர் கண்காணிக்கபட்டு, சம்பவங்கள் அரங்கேறும்போது கட்டுப்பாட்டுஅறைகளுக்கு இந்த கேமராக்கள் அலர்ட் சிக்னல்களை அனுப்பி எச்சரிக்கும். எனவே வீலிங், ரேசிங்கில்ஈடுபடும் இளைஞர்கள் முன்புபோல தப்பிக்க முடியாது.
காணும் பொங்கல் முடிந்த மறுநாள் அதிகாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் சொந்த ஊர்களில் இருந்துசென்னை திரும்பும் பயணிகளும்,விமான நிலையம் போன்றவற்றுக்கு செல்வோரும் தங்களது பயணத்தை சற்று முன்பாகவே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
கடந்ததீபாவளியைபோல இந்த முறையும்பண்டிகை முடிந்து மக்கள் சென்னைதிரும்பும்போது அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT