Published : 17 Jan 2024 05:45 AM
Last Updated : 17 Jan 2024 05:45 AM

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலை. துணைவேந்தர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் என்றஅமைப்பை அனுமதி பெறாமல்தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்தநிறுவனத்தை செயல்படச் செய்ததாக பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.

அதேபோல் சாதிப் பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து துணைவேந்தர் ஜெகன்நாதன் கைதான நிலையில், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, வரும் 19-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் ஜெகன்நாதன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றேன். அப்போது நிர்வாகம் மற்றும் நிதியை கையாளுவதில் முறைகேடுகள் இருந்தன. அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுத்தேன். தொலைதூரக் கல்வி பிரிவில் போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களை இடைநீக்கம் மற்றும் பணிநீக்கம் செய்ததால் எழுந்த கடும் எதிர்ப்பையும், உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலையும் மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

அரசின் அனுமதி இல்லாமல் அமைப்பை தொடங்கவில்லை. அரசு துறைகளிடம் உரிய அனுமதியை பெற்றிருக்கிறேன். எனது நற்பெயரை கெடுக்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் கீழ் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றில் பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு, வரும் 18-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x