Published : 20 Jan 2018 11:10 AM
Last Updated : 20 Jan 2018 11:10 AM

உடுமலை அருகே பாலாற்றில் தொடரும் மணல் திருட்டு: விவசாயிகள் குற்றச்சாட்டு

உடுமலை அருகே பாலாற்று படுகையில் தினமும் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக, அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை, வல்லக்குண்டாபுரம், எரிசனம்பட்டி, கரட்டுமடம், தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம் ஆகிய ஊராட்சிகளை கடந்து பாலாறு செல்கிறது. மழைக்காலங்களில் பாலாற்றில் வெள்ளம் செல்வது வழக்கம். இதனால், வழியோரங்களில் உள்ள விவசாய கிணறுகளுக்கும், பொதுமக்களின் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய்களுக்கும் நீர் வரத்து அதிகரிக்கும். அப்பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே அப்பகுதியில் போதிய மழை இல்லாததால், பாலாற்று படுகை உட்பட அதனை ஒட்டிய நிலங்களும் வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில், குடிநீர் ஆதாரமாக பயன்படும் பாலாற்று படுகையில் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, ‘தேவனூர்புதூர், பாண்டியன் கரடு, ஆண்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் சிலர் பாலாற்றில் இருந்து சாக்குகளில் மணலை அள்ளி குவித்து வருகின்றனர். அதனை, இரவு நேரத்தில் லாரிகளில் ஏற்றிச் சென்று விற்பனை செய்கின்றனர்.

தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான ஆற்று மணலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், யூனிட் மணல் ரூ.17000 வரை விற்கப்படுகிறது. பாலாற்றில் திருடப்படும் மணலும் இதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை, வருவாய்த் துறை அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பாலாற்றை நம்பியுள்ள பகுதிகள் பாலைவனமாக மாறும்’ என்றனர்.

வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற முறைகேடுகளை பொதுமக்கள் உடனடியாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தெரிவிப்பதன் மூலமாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x