Published : 18 Dec 2023 05:26 AM
Last Updated : 18 Dec 2023 05:26 AM

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் ரூ.6,000 விநியோகம்: வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000நிவாரண தொகை வழங்கும் பணியை சென்னை வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிவாரணம் வழங்குவதற்காக ரூ.1,487 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் கடந்த டிச.3, 4-ம்தேதிகளில் வட தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி வந்ததால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில்கனமழை பெய்தது. வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக நியாயவிலை கடைகள் மூலம் ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர்வட்டத்தில் 3 வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், பெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி,கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படுகிறது.

தவிர, சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்போர், மத்திய, மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் ஆகியோரது வீடுகளை 2 நாட்கள் வெள்ளம் சூழ்ந்திருந்து, பொருட்களை இழந்திருந்தால் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் படிவங்களில் பாதிப்புகளை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். பின்னர், அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் 13,72,509, திருவள்ளூரில் 6,08,726, செங்கல்பட்டில் 3,12,952, காஞ்சிபுரத்தில் 1,31,149என மொத்தம் 24.25 லட்சம் குடும்பஅட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். இதற்காக தமிழக அரசு ரூ.1,486.94 கோடி ஒதுக்கியுள்ளது.

இதற்கிடையே, ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன்கள் அந்தந்த நியாயவிலை கடைகளிலும், சில இடங்களில் வீடு வீடாகவும் கடந்த 14-ம் தேதி முதல் நேற்று வரை விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை வேளச்சேரி சக்தி விஜயலட்சுமி நகரில் உள்ள நியாயவிலை கடை அருகே நேற்று காலை பயனாளிகளுக்கு நிவாரண தொகையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், இப்பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே,பிரபாகர், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், உணவுத் துறை செயலர் கே.கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் தொடங்கி வைத்ததை அடுத்து, காலை 10.30 மணி முதல்,பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளஅனைத்து நியாயவிலை கடைகளிலும் நிவாரண தொகை விநியோகம் தொடங்கியது.

கட்டுப்பாட்டு அறை: புகார்களுக்கு இடமின்றி நிவாரண தொகை வழங்கவும், புகார் எழும் சூழலில், உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணவும் ஏதுவாக, சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இது காலை8 முதல் இரவு 8 மணி வரை செயல்படும். 044-28592828 மற்றும் 1100என்ற இலவச தொலைபேசி எண்களில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x