Published : 15 Dec 2023 05:34 AM
Last Updated : 15 Dec 2023 05:34 AM
சென்னை: மக்கள் விருப்பத்துக்கு மாறாக வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மண் ஆசை சிறிதும் இல்லாத வள்ளலார், சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரும் நிலப் பரப்பை சாதாரண ஏழை, எளிய மக்களிடமிருந்து பெற்றதற்குகாரணம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய தனி நெறியை வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் மட்டுமல்ல, அருட்பெரும் ஜோதி ஆண்டவரை, தைப்பூசத் திருநாளன்று தரிசிக்க பக்தர்கள் சிரமமின்றி ஒன்றுகூட பெரும் நிலப் பரப்பு வேண்டும் என்ற நோக்கமும்தான்.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாளுக்கு முந்தைய நாளே ஜோதி வழிபாட்டுக்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூர் பெருவெளியில் குவியத் தொடங்குவார்கள். தைப்பூசத் திருநாளில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் ஜோதி வழிபாட்டுக்காக கூடுகிறார்கள். அடுத்த நாள் அதிகாலை, 6-வது ‘ஜோதி வழிபாட்டின்’ போதும் கூட்டம் நிறைந்து காணப்படும். அதற்கு அடுத்த நாள் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் ‘திரு அறைக் காட்சி நாள்’ என்பதால், மேலும் பல லட்சம் பக்தர்கள் ‘திரு அறை தரிசனம்’ காண கூடுவார்கள்.
இப்படி ஆண்டுக்கு 4 முக்கிய நாட்களும் லட்சக்கணக்கானோர் ஒன்று கூடும் இடமாக வடலூர் பெருவெளி உள்ளது. இங்கு, சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்தி ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ கட்ட திமுக அரசு முனைந்துள்ளது அறிந்து இப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.
‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ அரசு கட்டுவதில் தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடும் வடலூர் பெருவெளியில் இம்மையத்தை கட்டுவதால், ஜோதி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்கின்றனர். இப்பெருவெளி நிலத்தை கையகப்படுத்தினால் ‘மாத பூச வழிபாடும், தைப்பூச சிறப்பு வழிபாடும்’ தடைபடும். பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்’ கட்டும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT