Published : 15 Dec 2023 05:07 AM
Last Updated : 15 Dec 2023 05:07 AM

பாரம்பரிய மருத்துவம் வளர அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் தேவை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநரின் ‘எண்ணி துணிக – ஆயுஷ் மற்றும் பாரம்பரிய மருத்துவர்களுடனான கலந்துரையாடல்’ தொடர் நிகழ்ச்சியின் 14-ம் பகுதி நேற்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, சித்த வைத்திய மூதறிஞர் மறைந்த அருச்சுனனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக விருது வழங்கி கவுரவித்தார். பாரம்பரிய எலும்பு முறிவு சிகிச்சை அறிஞர் வைத்தியரும், அருச்சுனனின் தம்பியுமான ப.டம்பாச்சாரி இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

சென்னை: பாரம்பரிய மருத்துவம் வளர,அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் தேவை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில், ‘எண்ணி துணிக’ என்ற தலைப்பில்கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஆயுஷ்மற்றும் பாரம்பரிய மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேடயம் வழங்கி கவுரவித்தார். பின்னர், அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஆளுநர் பேசியதாவது:

நவீன மருத்துவத்துக்கான மாற்று மருத்துவம் குறித்து யாரும் சிந்திப்பதில்லை. பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஏராளமான ஞானம் உள்ளது. உடல் நலக்குறைவு ஏற்படும் நேரத்தில், தேவைப்படும்போது பாரம்பரிய மருந்துகளை கொடுத்து நம் பெற்றோர்களும், முன்னோர்களும் நோயை குணப்படுத்துவார்கள். பாரம்பரியத்தை மறப்பது என்பது,மனிதத்துக்கு நல்லதல்ல. ஏராளமான சித்தர்களும், யோகிகளும் இம்மண்ணில் பிறந்திருக்கிறார்கள்.

நவீன மருத்துவம், மனித உடலை ஓர் இயந்திரமாக பார்க்கிறது. அது பலனளித்தாலும், கூடவே பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஆனால், பாரம்பரிய மருத்துவம், உடலை முழுமையானதாக பார்க்கிறது. மனித உடல் என்பது ஒருபொருள் அல்ல. எல்லா அறிவியலுக்கும் சில எல்லைகள் உள்ளன.உலக அளவில், பாரம்பரிய மருத்துவத்தின் தேவை அதிகரித்து வருகிறது. மனரீதியான பாதிப்புகளுக்கு, ‘யோகா’ செய்ய மருத்துவர்களே பரிந்துரை செய்கின்றனர். இதனால்,உலக அளவில் ஆயுஷ் சந்தை ரூ.1.90 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

நவீன மருத்துவம் ஆராய்ச்சிகள் வாயிலாக நிரூபிக்கப்படுகிறது. அதேபோல், பாரம்பரிய மருத்துவத்துக்கும் ஆழமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. ஆயுஷ் அவற்றை செய்யும் என நம்புகிறேன். உலக அளவில் இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம் வளர்ச்சி அடைகிறது. அதேபோல், நம் நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரமும் நிச்சயம் வளர வேண்டும். அதற்கு அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் தேவை. பாரம்பரிய மருத்துவ முறை உலக அளவில் வளர, அதற்கான தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஆயுர்வேத மருத்துவர்கள் சுதீர், ஐயப்பன் கரியட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x